சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நாளை மறுதினம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தியும் ஆரம்பிக்கப்படுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
மசகு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், நான்காவது முறையாக கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி மூடப்பட்டதுடன், இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீள திறக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் தாங்கிகளில் 90,000 மெட்ரிக் டன் மார்பன் என்ற வகையைச் சார்ந்த மசகு எண்ணெய் நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் 90,000 மெட்ரிக் டன் எண்ணெய் இறக்குமதிக்கான கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முழு கொள்ளளவுடன் உற்பத்தி செயல்முறையை தொடங்கினால், தினசரி 1600 மெட்ரிக் டன் டீசல், 550 மெட்ரிக் டன் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் 950 மெட்ரிக் டன் விமான எரிபொருள், 1450 மெட்ரிக் டன் உலை எண்ணெய் மற்றும் 450 மெட்ரிக் டன் நெப்தா ஆகியவற்றை உற்பத்தி செய்யமுடியும் என்று பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கூறுகின்றது.