தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை கடற்கரையிலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் பத்து லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 1100 கிலோ கடல் பதப்படுத்தப்பட்ட கடலட்டைகள் இந்தியா தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுளதுடன் தப்பி ஓடிய கடத்தல்காரர்களையும் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி கடல் வழியாக வேதாளை, மரைக்காயர்பட்டிணம், சீனியப்பா தர்கா கடற்கரையில் இருந்து நள்ளிரவு நாட்டுப்படகில் சட்டவிரோதமாக மர்ம பொருள் ஒன்று இலங்கைக்கு கடத்திச் செல்ல இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து வேதாளை கடற்கரையில்; நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகில் ஏறிய போலீசார் அந்த படகை முழுமையாக சோதனை செய்த போது படகுக்குள் சுமார் 20 மூடைகளில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நாட்டுப்படகில் இருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கைப்பற்றிய சிறப்பு தனிப்படை போலீசார் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு, வனத்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்ததிருந்த வனத்துறையினர் நாட்டுப்படகில்லிருந்து கைப்பற்றப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை மூட்டைகளைப் மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று எடை போட்டு பார்த்த போது 20 சாக்குகளில் மொத்தமாக 1100 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நாட்டுப்படகை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாட்டுப் படகின் உரிமையாளர் மற்றும் இச் சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை, வேதாளை, மரைக்காயர்பட்டிணம் சீனியப்பா தர்கா, உள்ளிட்ட மீனவ கிராமங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.