தமிழர்களை வைத்து ஜனாதிபதி ரணில் போடும் திட்டம்

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன. அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் முயற்சியை ஜனாதிபதி தற்போது கையாளுகிறார் என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் தீர்வுக்கு நான் தயாராக இருந்தேன். தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதற்கு இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு தெரிவிக்கும் முயற்சியில் ஜனாதிபதி அரசியல் தீர்வு விவகாரத்தை கையாளுகிறார்.

ஜனாதிபதி தலைமையில் கடந்த 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நாடாளுமன்றத்திலும் பொது இடங்களிலும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் கருத்துரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சமஷ்டி தொடர்பில் கருத்துரைக்கவில்லை.

காணி பிரச்சினைக்கு தீர்வு, பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு தீர்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கல், முறையான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

முப்படைகளில் பெரும்பாலானோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ளார்கள். 30 வருடகால யுத்த சூழலில் இருந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் யுத்தம் நிறைவடைந்த பிறகும் படையினரின் அதிகபடியான பங்குப்பற்றலுடன் இருப்பது பொருத்தமற்றது.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைகைதிகள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும்.

யுத்தத்தில் காணாமல்போனோருக்கு நேர்ந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளும் உரிமை அவர்களின் உறவுகளுக்கு உண்டு. ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட்டு உறுதியான இறுதி தீர்வை எட்ட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சர்வக்கட்சி தலைவர் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தை அடிப்படையாக கொண்டு தீர்வு வழங்கும் வகையில் 3 வருடங்களாக பல்வேறு தரப்பினருடன் 128 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நான் முன்வைத்த திட்டங்களை தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர் ஏற்றுக்கொண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன. அரசியல் தீர்வு வழங்க நான் தயாராக இருந்தேன். ஆனால் அதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் முயற்சியை ஜனாதிபதி தற்போது கையாளுகிறார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு வழங்குவது சாத்தியமற்றதானால் இனங்களுக்கிடையில் மீண்டும் வெறுப்பு நிலை ஏற்படும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலும் சிங்கள இனம் எமக்கு தீர்வு வழங்க விரும்பவில்லை என்று தமிழ் சமூகம் கருதும் நிலை ஏற்படும். அது உண்மையான இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இரு தரப்பிலும் இனவாதிகள் உள்ளார்கள் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews