எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. உரிய நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது பொருத்தமானது என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை முன்னர் அமைச்சரவைக்கு அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடி, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பிற்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இந்நிலையில் இதுவரை சுற்றுச்சூழல் சேத மதிப்பீடு பூர்த்தி செய்யப்படவில்லை என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி சுதர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இதுவரை பணம் செலுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.