நாட்டில் போதைப்பொருள் பாவனை உச்சமாக அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இலங்கையில் பல இடங்களில் இது தொடர்பான காவல்துறை சுற்றிவளைப்புக்களும், கைதுகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளன.
அந்தவகையில், விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தோட்டை – போதிமலுவ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் விருந்துபசாரம் எனும் பெயரில் ஐஸ் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 30 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 21 முதல் 27 வயதுகளைக் கொண்டவர்கள் என கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, வத்தளை, புதுக்கடை, நாரஹேன்பிட்டி, மோதர, மட்டக்குளி போன்ற பிரதேசங்களை சேர்த்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை சுற்றிவளைப்பு
உல்லாச விடுதியொன்றில் ஐஸ் போதைப்பொருள் பாவனைகளுடன் விருந்துபசாரம் ஒன்று நடத்தப்படுவதாக காவல்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை பலப்பிட்டிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.