பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டுசென்ற உலகக் கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை 03 ஆவது முறையாக ஆர்ஜென்ரீனா அணி கைப்பற்றியுள்ளது 22ஆவது பிபா உலகக் கிண்ணக்; கால்ப்பந்தாட்ட தொடர் கட்டாரில் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதியாட்டம் நேற்றிரவு கட்டாரில் நடைபெற்றது. விறுவிறுப்பாக ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் பாதியில் ஆர்ஜென்ரீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. 23ஆவது நிமிடத்தில் லயனல் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். 36ஆவது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியா கோல் அடித்தார். முதல் பாதி ஆட்டம் நிறைவடையும் வரை பிரான்ஸ் அணியால் கோல் போட முடியவில்லை. இடைவேளையின்போது 2 க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டத்தை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள் பிரான்ஸின் வீரர்கள். ஆர்ஜென்ரீனாவின் கோல் பரப்பில் பிரான்ஸ் ஆதிக்கம் செய்தபோதும், 80ஆவது நிமிடத்திலேயே அந்த அணியால் முதல் கோலை போட முடிந்தது. அந்தக் கோலை அடித்த நட்சத்திர வீரர் எம்பாப்பே மறுநிமிடமே அதாவது 81ஆவது நிமிடத்திலேயே இரண்டாவது கோலைப் போட்டார். இதனால், ஆட்டத்தில் அனல் பறக்க ஆரம்பித்தது. எனினும், போட்டி நிறைவடையும் வரை இரு அணிகளாலும் மேலதிக கோலை அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 2 – 2 கோல்கள் என்ற கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதனால், மேலதிக நேரம் வழங்கப்பட்டது. 108ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை கோலாக்கினார். ஆர்ஜென்ரீனவீரர் ஒருவர் அடித்த பந்து பிரான்ஸின் கோல் காப்பாளரின் கைகளில் பட்டு திரும்பவே அந்தப் பந்தை கோல் ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார் மெஸ்ஸி. அனல் தெறித்த போட்டியில் 118ஆவது நிமிடத்தில் பிரான்ஸின் எம்பாப்பே தண்டனை உதை வாய்ப்பு ஒன்றை கோல் ஆக்கினார். இதனால், போட்டி மீண்டும் 3 க்கு 3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சமநிலை தவிர்ப்பு உதை மூலமாக வெற்றி – தோல்வியை கணிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஆர்ஜென்ரீனா 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை தன்வசமாக்கியது. போட்டியில் தங்கக் காலணி விருது பிரான்ஸின் எம்பாப்பேக்கு வழங்கப்பட்டது. தங்கக் கையுறை விருதை ஆர்ஜென்ரீனாவின் கோல் காப்பாளர் டி. மார்ட்டினஸீம் தங்கப் பந்து விருதை லயனல் மெஸ்ஸியும் வென்றனர்.