யாழ்ப்பாணத்தில் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளே யாழ் மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்கரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாண மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதலிலேயே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதோடு, போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென பொட்டலங்களாக கட்டப்பட்டு தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தான் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களுக்கு இந்த மாவா பொருளை விற்பனை செய்வதாகவும் தனக்கு இதனால் அதிக லாபம் கிடைப்பதாகவும் நீண்ட காலமாக இந்த தொழிலை மறைமுகமாக செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.