
போலியான இந்திய கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இரண்டு பெண் பயணிகளை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கங்கா (46), சொர்ணகலா (22) என்பவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டையும் இலங்கைக்கான சுற்றுலா விசாவையும் தயாரித்துள்ளதாக விமான நிலைய தரப்புகள் தெரிவித்துள்ளன.
அதிகாரிகள் குறித்த இரு பெண்களின் தரவுத்தளத்தை சரிபார்த்தபோது, கடவுச்சீட்டுக்கள் போலியானவை என்பதை கண்டறிந்து, அவர்களை விமானத்தில் ஏற விடாமல் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது இரு பெண்களும் இலங்கை பிரஜைகள் என்பதும், சுற்றுலா விசாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் விசாரணைக்காக சென்னை பொலிஸாரின் மத்திய குற்றப்பிரிவின் (சிசிபி) போலி கடவுச்சீட்டுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.