யாழ்ப்பாணம் மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் (UNHCR) பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அகதிகள் அனைவரையும் மீரிகாண தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.
அத்துடன், நாடு ஒன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்த வலைப்பைச் சேர்ந்த இலங்கையரை வரும் ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மியன்மாரில் இருந்து வெளியேறப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேஷியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்டத்துக்கு புறம்பாக படகில் பயணித்த போது நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்.
இவ்வாறு தத்தளித்தவர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர்.
அவர்கள் மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவிய இலங்கையருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இன்று மாலை 105 பேரையும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் திருமதி காயத்திரி சைலவன், உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
நாடு கடத்த முயன்ற வலையமைப்பைச் சேர்ந்த இலங்கையரை வரும் ஜனவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அகதிகள் 104 பேரையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்ட அகதிகளை மீரிகம முகாமுக்கு அனுப்பிவைக்க கட்டளை பிறப்பித்தார்.
அகதிகளுக்கான ஐ.நா. ஆணையகம் 104 பேரையும் பொறுப்பெடுப்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் அனுமதியை நாடுமாறும் நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.
இந்நிலையிலேயே 105 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மீரிகாணவுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.