
யாழ்.மாநகர சபை பொது நுலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பில் பிரேரணை ஒன்று யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களினால் முன்மொழியப்பபட்டு அது கௌரவ உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிலையில் அச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக 17 பாடசாலை நூலகங்கள் மற்றும் 14 பிரதேச சபைக்குரிய 31 நூலகங்களுக்கு இன்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் வழங்கப்பட்டது.
எதிர்வரும் காலங்களிலும் புத்தகங்கள் தேவைப்படும் நூலகங்கள் அதற்கான கோரிக்கை கடிதங்களை வழங்கும் பட்சத்தில் அவ் நூலகங்களுக்கும் புத்தகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் உறுதியளித்தார்.
யாழ்.பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் பொது நூலக பிரதம நூலகர், பாடசாலை, பிரதேச சபைகளின் நூலகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.




