
கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பொருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப் படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், குடும்ப பொருளாதார நிலைமைக் குறித்த கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுக் கடிதம் ஆகியவற்றுடன், 2022-12-23 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும்.
பின்னர் இவ்விண்ணப்பம் பாடசாலை அதிபர் மூலமாக வலயக் கல்வி அலுவலகத்துக்கூடாக ஜனாதிபதி அலுவலகத்திடம் கையளிக்கப்பட வேண்டும்.
எனினும் விண்ணப்பம் கையளிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் முறையான தெளிவின்மைக் காரணமாக பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் நேரடியாகவே ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, காலதாமதமின்றி புலமைப்பரிசில் வழங்கும் இவ்வேலைத் திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்காக, அனைத்து விண்ணப்பங்களையும் பாடசாலை அதிபரிடம் கையளிக்குமாறு நாம் விண்ணப்பதாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் விண்ணப்பதாரிகள் அரசாங்க அல்லது எவ்வித கட்டணமும் அறவிடப்படாத தனியார் பாடசாலைகளில் கல்வி கற்பவர்களாகவும் அவர்களது மாதாந்த குடும்ப வருமானம் ரூ.75,000/- ஐ அண்மிக்காத வகையிலும் இருப்பது அவசியமாகும்.
அத்துடன் விண்ணப்பதாரர்கள் கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையாக தோற்றி 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான முழுமையான தகைமையைக் கொண்டிருப்பதும் கட்டாயமாகும்.
ஒவ்வொரு கல்வி வலயத்திலுமுள்ள 30 மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை, அவர்களுக்காக மாதாந்தம் 5,000 ரூபா வீதம் 24 மாதங்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.