ஆப்கானிஸ்தானியர்கள், வெளிநாட்டில் அடைக்கலம் புகுவதை தடுக்க காபூல் விமான நிலையம் செல்லும் சாலையை தலிபான்கள் அடைத்துள்ளனர். வெளிநாட்டினர் செல்வதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்து உள்ளனர்.
ஆப்கனை தலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், ஆயிரகணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டனர். விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்த சிலர் கீழே விழுந்து உயிரிழந்தனர். மேலும் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகித் கூறியதாவது: காபூல் விமான நிலையம் செல்லும் சாலை அடைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையை ஆப்கானியர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், வெளிநாட்டினர் இந்த சாலையில் விமான நிலையத்திற்கு செல்லலாம். காபூல் விமான நிலையத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்படாது.
ஏற்கனவே அறிவித்தபடி ஆக.,31க்குள் தனது மீட்பு பணியை அமெரிக்கா முடிக்க வேண்டும். அதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது. ஆப்கானியர்கள் மீட்டு செல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. டாக்டர்களும், படித்தவர்களும் ஆப்கனை விட்டு செல்லாமல், இங்கேயே பணிபுரிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்