
நுவரெலியா புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில், புரோமின் என்ற இரசாயன குவளை உடைந்ததன் காரணமாக, இரசாயனம் ஆய்வுக்கூடம் முழுவதும் பரவியது. அங்கிருந்த ஐந்து மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மூச்சுத் திணறல் காரணமாக புஸ்ஸல்லாவ வகுக்கப்பட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமையினை சீர்செய்ய பாடசாலைக்கு விரைந்த கண்டி தீயணைக்கும் பிரிவினர் இரசாயனத்தை அப்புறப்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். ஏனைய மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உடனடியாக வெளியேற்றி அவர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் கம்பளை கல்வி வலயத்திற்கும், மாகாண கல்வி பணிமனைக்கும் புஸ்ஸலாவ பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் கம்பளை பொலிஸ் அத்தியட்சகருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.