மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு அமைய. நேற்றைய தினம் மூதூர் கிழக்கிற்கான விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட் திரு நோயல் இமானுவேல் ஆண்டகை பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும், பெண் பிள்ளைகளின் அத்தியவசியத் தேவைகளுக்கான பொதிகளையும், வழங்கியிருந்ததுடன் நல்லூர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்கும் பெண் பிள்ளைகளுக்கும், இவ்வுதவிகளை வழங்கியதுடன், பாட்டாளிபுரத்தில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபடும் 40மீனவர்களுக்கான வலைகளையும் வழங்கியிருந்தார்.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஆயர் இப்பிரதேசங்களில் நிலவுகின்ற வறுமை மற்றும் அன்றாட வாழ்வியலில் மக்களும் பாடசாலைப் பிள்ளைகளும் எதிர் கொள்கின்ற சவால்களைக் குறைக்கும் வகையிலான மனிதாபிமானப் பணிகளை தனவந்தர்கள் மற்றும் சமூக நல்லெண்ணம் கொண்டவர்களின் பங்களிப்புடன் செய்து வருவதாகவும் உதவிகளைப் பெறுகின்ற இச் சமூகம் கிடைக்கின்ற உதவிகளைச் சீராகப் பயன்படுத்திக் கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் தொழில் முயற்சிகளிலும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டியது அவசியம் எனக் கேட்டுக் கொண்டார்.
மூதூர் கிழக்கின் அதிகஸ்ரப் பிரதேசமான பாட்டாளிபுரம் உள்ளடங்கலான பகுதிகளில் மறைமாவட்ட ஆயரினால் நீண்ட காலமாக வாழ்வாதார மற்றும் இடர்கால உதவித்திட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்