பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா பிரதான பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரியவின் பணிப்புரையின் பிரகாரம், நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் (21.12.2022) கொட்டகலை நகரப்பாடசாலைகளில் சோதனைகள் நடைபெற்றுள்ளன.
கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலைகளில் இந்த போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தனித்தனியாக பாடசாலை மாணவர்களது புத்தகப் பைகள் சோதனை செய்யப்பட்டதுடன், உடைகளும் சோதனை செய்யப்பட்டுள்ளன.
குறித்த பிரதான பாடசாலைகளின் அதிபர்களின் அனுமதியுடன், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்புபிரிவு குழுவின் பங்குபற்றலுடன் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவின் மூலம் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.