பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 47 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளை உள்ளடக்கி இந்த விசேட நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 01 கிலோ 260 கிராம் மாவா, 09 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயின், 02 கிராம் 38 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் 590 மில்லிகிராம் கஞ்சா ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவன் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 6.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, இது தொடர்பில் தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.