தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தமிழ்த்தேசிய சக்திகள் மீது ஆறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தாh.; அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை என்ன என்பதை கடந்த வாரங்களில் ஆராய்ந்திருந்தோம். அவர் வைத்த இறுதி குற்றச்சாட்டு தமிழ் – முஸ்லீம் உறவு தொடர்பானது. “சகோதர முஸ்லீம்களின் தேசிய அபிலாசைகளை உள்வாங்காமல் வடக்கு – கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார் என்பதே இக்குற்றச்சாட்டாகும். தமிழ்-முஸ்லீம் முரண்பாடு தொடர்பான ஆழமான புரிதலின்மை, முஸ்லீம்களின் சமூகக் கட்டமைப்பு, முஸ்லீம்அரசியல் வரலாறு தமிழ்த்தேசியச்சக்திகளின் முஸ்லீம்கள் தொடர்பான நிலைப்பாடு என்பவற்றில் தெளிவின்மை என்பவற்றிலிருந்தே இக்குற்றச்சாட்டு மேலெழுகின்றது.
தமிழ் முஸ்லீம் முரண்பாட்டுக்கு நீண்ட வரலாறு உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து இது வளர்ந்து வந்தது எனலாம். 1833ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின்படி உருவாக்கப்பட்ட சட்டசபையில் தமிழருக்கு ஒரு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. தமிழர் பிரதிநிதியே முஸ்லீம்களின் நலன்களையும் கவனித்தார். முஸ்லீம்கள் இதனை எதிர்த்தனர். தாம் தமிழ் மொழியைப் பேசினாலும் மத ரீதியாக வேறுபட்ட தனியான இனத்தொகுதியினர் தங்களுக்கு தனியான பிரதிநிதித்துவம் தரப்படல் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று ஆங்கிலேய அரசாங்கம் 1889ம் ஆண்டு முஸ்லீம்களுக்கென தனியான பிரதிநிதித்தை வழங்கியது. தென்னிலங்கையைச் சேர்ந்த முஸ்லீம் பிரதிநிதியே முழு இலங்கை முஸ்லீம்களுக்கும் பிரதிநிதியாக விளங்கினாh.; கிழக்கு முஸ்லீம் தலைமை என்பது அக்காலத்தில் எழுச்சி பெறவில்லை.
1915ம் ஆண்டு சிங்கள முஸ்லீம் கலவரம் இடம் பெற்றது. கண்டியில் ஆரம்பமான இக்கலவரம் பின்னர் நாடெங்கும் விஸ்தரிக்கப்பட்டது. இக்கலவரத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முஸ்லீம்களுக்கே சார்பாக நின்றனர். சிங்கள தலைவர்களை கடுமையாக ஒடுக்கினர். டி.எஸ். சேனநாயக்கா உட்பட பல சிங்கள அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்காலத்தில் படித்த இலங்கையர் பிரதிநிதியாக சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து தெரிவுசெய்யப்பட்டவர் சேர்.பொன்.இராமநாதன் ஆவார். அவர் சிங்கள மக்களுக்கு ஆதரவாக நின்றார். முதலாம் உலகயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த நெருக்கடியான கால கட்டத்திலும் சேர்.பொன்.இராமநாதன் கப்பலில் இங்கிலாந்து சென்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் பேசி கலவரத்தை நிறுத்தினார். கைது செய்யப்பட்ட சிங்கள அரசியல் தலைவர்களையும் விடுவித்தார்.
இந்த சிங்கள, முஸ்லீம் முரண்பாட்டில் தமிழ்த்தலைமைகள் சிங்கள சார்பு நிலைப்பாட்டை எடுத்தமை முஸ்லீம் தலைவர்களை அதிர்ப்திக்குள்ளாக்கியிருந்தது
1921 க்கு முன்னர் தமிழர்கள் தங்களுக்கென இன அரசியலை நடாத்தியிருக்கவில்லை. பண்பாட்டுத்தளத்தில் இன அடையாளத்தையும் அரசியல் தளத்தில் இலங்கையர் என்ற அடையாளத்தையுமே பேணினர். அன்றைய தமிழ்த் தலைவர்களாக இருந்த சேர்.முத்துக்குமாரசாமி, சேர்.பொன.;இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் என்போர் தமிழர்களுக்கு மட்டும் தலைவர்களாக இருக்கவில்லை. முழு இலங்கையர்களுக்கும் தலைவர்களாக விளங்கினர். தமிழர்களும் சிங்களவர்களும் இந் நாட்டில் பெரும்பான்மையினர் ஏனையோரே சிறுபான்மையினர் என்ற கருத்தும் தமிழ் அரசியல் சக்திகளிடத்தில் மேலோங்கியிருந்தது. சிங்களத் தரப்பில் அன்று ஆளுமைமிக்க தலைவர்களும் இருக்கவில்லை. கொய்கம – கரவாசாதி முரண்பாடும் இருந்தது. இதனால் படித்த இலங்கையர் பிரதிநிதியாக சேர்.பொன்.இராமநாதன் 1912லும் 1916லும் தெரிவுசெய்யப்பட்டார். சேர்.பொன்.அருணாசலம் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கை தேசிய காங்கிரசின் தலைவராகவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
1921ல் பிரதிநிதித்துவப் பிரச்சினை காரணமாக சேர்.பொன்.அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து வெளியேறி தமிழர் மகாசபையை உருவாக்கி தமிழ் இன அரசியலை ஆரம்பித்துவைத்தார். இலங்கையிலுள்ள முழுத்தமிழர்களதும் நலன்களைப் பேணுவது இவரது கொள்கையாக இருந்தது. இவரின் தொடர்சியை ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்னெடுத்தார். 1920களில் சிறுபான்மையோர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் முஸ்லீம்கள் ஒத்துழைத்தாலும் பின்னர் விலகிச் சென்றனர். சிங்களத் தரப்புடன் இணைந்தே எமது அரசியல் இருக்கும் எனக் குறிப்பிட்டனர்.
1936ம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் தனிச் சிங்கள மந்திரி சபை உருவாக்கப்பட்டது. ஜீ.ஜீ.பொன்னம்பலம் 50:50 இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த இயக்கத்திலும் முஸ்லீம்கள் இணையவில்லை. 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார். கொழும்பு – யாழ்ப்பாணம் என்று இருந்த தமிழர் அரசியலை வடக்கு – கிழக்கு தாயக அரசியலாக மாற்றியமைத்தார். சமஸ்டி அரசில் முஸ்லீம்களின் வகிபாகம் பற்றி தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தார். 1949ம் ஆண்டு தமிழரசுக் கட்சி உருவானபோது தந்தைசெல்வா தலைமை உரையை ஆற்றியிருந்தார். அந்த உரையில் முஸ்லீம்கள் பற்றிய நிலைப்பாடு பற்றி அவர் கூறியது இதுதான்.
“கிழக்கு மாகாணம் முழுவதையும் தமிழ் அரசின் பகுதியாக்க வேண்டுமென்றால் தமிழ்பேசும் தமிழர்களும் முஸ்லீம்களும் ஒன்றுசேர வேண்டும். ஆனால் எங்களுடைய இயக்கம் முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகள் தமிழ்ப் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? சிங்களம் பேசும் பிரதேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா? என்பதைத் தீர்மானிப்பதற்கு முஸ்லீம்களுக்கு பூரண சுதந்திரம் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்”.
தமிழரசுக் கட்சிக்கு முஸ்லீம்களிடமிருந்து பெரிய ஆதரவு இருந்தது எனக் கூறிவிட முடியாது. கிழக்கிலிருந்து சில முஸ்லீம் தனிநபர்கள் மட்டுமே கட்சியுடன் இணைந்தனர். முஸ்லீம் சமூகம் கட்சிக்கு வெளியிலேயே நின்றது. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதி இலங்கை தேசியக்கொடி உருவாக்கத்திற்கான குழு உருவாக்கப்பட்டது. அதில் முஸ்லீம் பிரதிநிதியாக டி.பி.ஜயா அங்கம் வகித்தார். கண்டி அரசனின் வாளேந்திய சிங்களக் கொடியையே தேசியக் கொடியாக மட்டக்களப்பு பாரளுமன்ற உறுப்பினர் முதலியார் சின்னலெப்பை தான் பிரேரித்திருந்தார். தொழிற்சங்கத் தலைவரான ஏ.ஈ.குணசிங்கா வழிமொழிந்தார்.
தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கம் இலங்கையின் இறைமையைக் குறித்திருந்தது. அதற்கு வெளியே தமிழ் முஸ்லீம் மக்களைக் குறிக்கும் வகையில் செம்மஞ்சள், பச்சைக் கோடுகள் இடப்பட்டன. இலங்கையின் இறைமைக்கு வெளியே தமிழ், முஸ்லீம் மக்கள் விடப்பட்டதை குழுவில் அங்கம் வகித்த செனட்டர் நடேசன் கடுமையாக எதிர்த்தார். ஆனால் முஸ்லீம் உறுப்பினரான டி.பி.ஜயா ஆதரித்தார். அமைச்சராக இருந்த ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ஆதரித்தார்.
செனட்டர் நடேசன் தேசியக் கொடி குழுவில் இருந்து வெளியேறி “தேசியக் கொடி தேசப் பிரிவினையின் குறியீடாக இருக்கும்” என அறிக்கை வெளியிட்டார். தேசியக் கொடி வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போதும் முஸ்லீம் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். வவுனியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சி.சுந்தரலிங்கம் தேசியக் கொடியை எதிர்த்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். மீளவும் இடைத் தேர்தலில் வெற்றிபெற்றார்.
தமிழரசுக் கட்சி தேசியக் கொடியை கடுமையாக எதிர்த்தது. “தமிழ் பேசும் சமூகம் புறக்கணிக்கப்பட்ட இரண்டாம்தர பிரஜைகளாக இந்நாட்டில் வாழ்கின்றனர் என்பதைப் பிரகடனப்படுத்தும் ஒட்டுக்கொடி” என பிரச்சாரம் செய்தது. தேசியக் கொடி எதிர்ப்பு இயக்கத்தில் முஸ்லீம் மக்கள் பங்குபற்றவில்லை.
1941ம் ஆண்டு இப்போதைய அம்பாறை மாவட்டத்தில் கல்லோயாத்திட்டம் என்ற பெயரில் சிங்கள குடியேற்றத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பட்டிப்பளை ஆற்றை மறித்து சேனநாயக்கா சமுத்திரம் உருவாக்கப்பட்டு அதனைச் சுற்றியே சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்தின் பின்னரே அங்கு மக்கள் குடியேறினர். இக் குடியேற்றத்திட்டத்தில் 44 குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அதில் 38 கிராமங்கள் சிங்களவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. 6 கிராமங்களே தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒதுக்கப்படடிருந்தன. இந்த ஆறு கிராமங்களும் ஒன்றில் நீர்ப்பாசன வசதிகள் குறைந்தனவாகக் காணப்பட்டன. அல்லது அவ் வசதிகள் சிங்களக் கிராமங்களினூடு செல்வதாக இருந்தன.
1959ம் ஆண்டு இக் குடியேற்றக் கிராமங்களை மையமாக வைத்து அம்பாறை தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவே கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது சிங்களத் தொகுதியாகும். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற தேர்தலில் இத் தேர்தல் தொகுதியிலிருந்து முதன் முதலாக சிங்களப் பிரதிநிதி தெரிவுசெய்யப்பட்டார். 1961ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் தொற்குப் பகுதியைப் பிரித்து அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. சிங்கள குடியேற்றப்பகுதியான அம்பாறை நகரமே மாவட்டத்தின் தலைப்பட்டினமாக்கப்பட்டது. அம்பாறை என்பது தமிழ்ப் பெயராக இருந்ததினால் பின்னர் “திகாமடுல்ல” என சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. சிங்கள மக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மொனராகலை மாவட்டத்துடன் இணைந்திருந்த மகாஓயா, பதியத்தலாவை என்கின்ற இரு சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகள் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ளபோதும் மாவட்ட அரச செயலகக் கடமைகள் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன.
முஸ்லீம்களின் இதயம் அம்பாறை மாவட்டம்தான். இம் மாவட்டம் சிங்களமயமாக்கப்பட்டபோது முஸ்லீம் தலைமைகள் பெரியளவிற்கு எதிர்ப்பைக்காட்டவில்லை. எதிர்ப்பைக் காட்டியவர்கள் தமிழ் மக்களே! தமிழர்களின் குடியேற்ற எதிர்ப்பு இயக்கத்திலும் முஸ்லீம்கள் சமூகமாக பங்குபற்றவில்லை. சிங்களமயமாக்கிய தென்னிலங்கை கட்சிகளின் பிரதிநிதிகளாகவே முஸ்லீம் தலைவர்கள் இருந்தனர். குறைந்தபட்சம் தாங்கள் அங்கம் வகித்த கட்சிக்குள்ளும் குடியேற்றங்களுக்கான எதிர்ப்பைக் காட்டவில்லை.
1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தென்னிலங்கையில் இருந்த முஸ்லீம் தலைவர்கள் மொழி முஸ்லீம்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல எனக்கூறி தனிச் சிங்களச் சட்டத்தை ஆதரித்தனர். கிழக்கிலிருந்த முஸ்லீம் தலைவர்களும் பெரிய எதிர்ப்பைக் காட்டவில்லை. தமிழரசுக் கட்சியிலிருந்த முஸ்லீம் நபர்களே எதிர்ப்பைக் காட்டினர். முஸ்லீம் சமூகம் மௌனமாக இருந்தது.
1956ம் ஆண்டு ஆவணி மாதம் 16ம், 17ம் ,18ம் திகதிகளில் தமிழரசுக்கட்சியின் நான்காவது மாநாடு திருக்கோணமலையில் இடம்பெற்றது. அம் மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நோக்கம் வடக்கு கிழக்கில் “சுயாட்சித் தமிழரசு” ஒன்றை உருவாக்குதல் எனத் தீர்மானிக்கப்பட்டது. முஸ்லீம் உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கிணங்க இத் தீர்மானம் பின்னர் “சுயாட்சித் தமிழரசும், சுயாட்சி முஸ்லீம் அரசும் இணைந்த மொழிவழி அரசு” என மாற்றப்பட்டது.
1961ம் ஆண்டு வடக்கு கிழக்கில் சிங்கள மொழி அமுலாக்கத்தை எதிர்த்து அரச செயலகங்களின் முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்றது. இப் போராட்டம் இராணுவத்தினரால் மோசமாக நசுக்கப்பட்டது. தலைவர்கள் பலர் கோமகம இராணுவமுகாமில் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்களில் மசூர்மௌலானாவும் கே.எஸ்.ஏ.கபூரும் அடங்கியிருந்தனர். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.சீ.அகமது வீட்டுக் காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
1960ம் ஆண்டு மார்ச் தேர்தலில் நிந்தாவூரிலும், பொத்துவிலிலும் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் இரு முஸ்லீம் பிரதிநிதிகள் வெற்றிபெற்றனர். 1960ம் ஆண்டு யூலைத் தேர்தலிலும் கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் இருந்து தமிழரசுக் கட்சி சார்பில் இரு முஸ்லீம்கள் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் குறுகிய காலத்திலேயே இருவரும் அரசாங்கக் கட்சிக்கு மாறினர். இதேபோல மூதூர் தொகுதியிலிருந்து தமிழரசுக் கட்சி சார்பில் வெற்றிபெற்ற முஸ்லீம் பிரதிநிதியும் குறுகிய காலத்திலேயே அரசாங்கக் கட்சிக்கு மாறினர். 1977ம் ஆண்டு தேர்தலில் அஸ்ரப் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பீரங்கிப் பேச்சாளராக இருந்தார். அமிர்தலிங்கம் ஒரு கூட்டத்தில் “தாம் தமிழீழத்தைப் பெற்றுத்தராவிடில் தம்பி அஸ்ரப் பெற்றுத் தருவார்”; எனக் குறிப்பிட்டிருந்தார். 1970களில் புத்தளம் பள்ளிவாசல் தாக்கப்பட்டு 7 முஸ்லீம்கள் கொலை செய்யப்பட்டபோது உடனடியாக கண்டனக் குரல் எழுப்பியவர் தந்தை செல்வாவே ஆவார்.
ஆயுதப் போராட்ட இயக்கங்களிலும் முஸ்லீம் சமூகத்திலிருந்து சில தனிநபர்களே இணைந்திருந்தனர். முஸ்லீம் சமூகம் வெளியிலேயே நின்றது. மூதூர் பிரதேசம் சிங்கள ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்ததினால் முஸ்லீம் இளைஞர்கள் சற்று அதிகமாக ஆயுத இயக்கங்களில் சேர்ந்தனர். ஜான் மாஸ்ரர் இதில் முக்கியமானவர் ஆவர். இவர் புளொட் இயக்கத்தின் தளத்திற்கு பொறுப்பாக இருந்தார். லெபனானில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பயிற்சியைப் பெற்றவர். தனது மருத்துவப் படிப்பையே உதறி எறிந்து ஆயுத இயக்கத்தில் சேர்ந்திருந்தார்.
புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் முஸ்லீம் மக்களுக்கென தனியான அதிகார அலகை ஏற்றிருந்தன. புலிகள் இயக்கம் தமிழீழம் கிடைத்த பின்னர் முஸ்லீம் மக்களின் வகிபாகத்தைத் தீர்மானிக்கலாம் எனக் குறிப்பிட்டடிருந்தது. முஸ்லீம்களை வடக்கிலிருந்து வெளியேற்றியமை புலிகளின் இராணுவத் தீர்மானம். இதனைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை. இந்த வெளியேற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல.
இன்றும் கூட இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களுக்கான தனி அதிகார அலகுக் கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதற்கு தமிழ்த் தேசிய சக்திகள் தயாராகவே உள்ளனர். எனினும் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லீம்கள் ஆதரிக்கவில்லையென்றாலும் தமிழ் மக்களின் கூட்டிருப்பையும,; கூட்டுரிமையையும், கூட்டு அடையாளத்தையும் பேணுவதற்கு வடக்கு கிழக்கு இணைப்பு தமிழ் மக்களுக்கு அவசியமானதாகும். வடக்கு கிழக்கிலுள்ள தமிழப் பிரதேசங்களை நிலத்தொடர்ச்சியற்றவகையிலாவது இணைத்துவடக்கு கிழக்கு இணைப்பை பூர்த்திசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய சக்திகளில் ஒருசாரார் கருதுகின்றனர்.
முஸ்லீம் மக்களின் தேசியப் பிரச்சினையில் தமிழ்த் தேசிய சக்திகள் அக்கறை கொள்ளவில்லை என்பது மனோகணேசனின் அபாண்டமான குற்றச்சாட்டு. அக்கறைகளில் போதாமைகள் இருக்கலாம் அதனைக் களைவதற்கு மனோகணேசனும் உதவவேண்டும் என்பதே தமிழ்த் தேசிய சக்திகளின் எதிர்பார்ப்பாகும்.