50 வயதிற்கு குறைந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத கோவிட் தொற்றாளர்களின் மரணமானது சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களை விடவும் 3.8 மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும், கோவிட் – 19 தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும் கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமான நான்கு தடுப்பூசிகளின் செயற்றிறன் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
50 வயதிற்கு மேற்பட்டவர்களை அவதானிக்கையில், சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம் 8 மடங்கு அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம், பைஸர், அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட 50 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இதுவரையில் மரணங்கள் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.