மலையக மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக இரண்டு விவகாரம் தொடர்ச்சியாக வாதப் பிரதிவாதங்களுக்குள்ளாகி வருகின்றது. ஒன்று மலையக மக்களின் அடையாளம் பற்றியது. இரண்டாவது மலையக மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியது. அடையாளம் தொடர்பில் மலையக மக்களை மலையக தமிழர் என்று அழைப்பதா? இந்திய வம்சாவழித் தமிழர் என்று அழைப்பதா? என நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. தற்போதும் அந்த விவாதம் முற்றுப்பெறவில்லை.
அரசியல் தீர்வு தொடர்பில் நிலம்சார் அதிகாரப் பகிர்வா? சமூகம்சார் அதிகாரப் பகிர்வா? என்ற விவாதமும் இடம்பெற்று வருகின்றது. இந்த விவாதங்களுக்கு பிரதான காரணம் மலையக மக்கள் சில இடங்கள் நில ரீதியாக செறிந்து வாழ்கின்ற அதேவேளை பல இடங்களில் சிதறி வாழ்வதும் தான். இத்தகைய பண்புகளைக் கொண்ட ஒரு மக்கள் சமூகத்திற்கு அடையாளம,; அரசியல் தீர்வு என்பன பற்றி ஒரு தீர்க்கமான முடிவிற்கு வருவது கஸ்டமானதே.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தையே அதிகம் பேணி வந்தது. இந்தியாவுடன் அதற்குள்ள தொடர்பு! சிதறிவாழும் மலையக மக்கள் மத்தியிலும் அது செயற்பட்டுக்கொண்டிருத்தல் என்பன அதற்கு காரணங்களாக இருந்திருக்கின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் அடிப்படைப்பலம் தொழிற்சங்கப் பலம்தான். இன ரீதியான அரசியலை அது பெரியளவிற்கு பேசுபொருளாக்கவில்லை.
ஆனால் மலையகத்தின் சமூக வளர்ச்சி ஒரு படித்த மத்தியதர வர்க்கத்தை காலப்போக்கில் உருவாக்கவே தொழிற்சங்க அரசியலுக்கு அப்பால் இன ரீதியான அரசியலும் வளரத் தொடங்கியது. இந்த மத்தியதர வர்க்கமே மலையக மக்களின் அடையாளம் தொடர்பாக மலையகத் தமிழர் என்ற அடையாளத்தையும், அரசியல் தீர்வு தொடர்பாக நில ரீதியான அதிகாரப்பகிர்வையும் முன்னிறுத்தத் தொடங்கியது. மலையக மக்களை ஒரு தேசிய இனமாகப் பார்க்கும் சிந்தனையும் வளரத் தொடங்கியது.
தேசிய இனம் என்ற பார்வையை மலையக மக்கள் இயக்கம் முன்னிலைப்படுத்தியது. மலையக மக்கள் முன்னணி அதனை வளர்த்தெடுத்து மலையக மக்களுக்கென தனியான அதிகார அலகு வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தியது. மலையக மக்கள் முன்னணியின் கோட்பாட்டாளரான காதர் அதற்கான கோட்பாட்டுத்தளத்தையும் உருவாக்கினார். சந்திரசேகரனும் தர்மலிங்கமும் அதனை அரசியல் செயல்பாட்டுத்தளத்திற்கு கொண்டுசென்றனர். “மலையகம் எமது தாயகம் நாம் ஒரு தேசியம்” என்ற கோசமும் எழுச்சியுற்றது. காதர் மோகன்ராஜ் என்ற பெயரில் தான் எழுதிய “20ம் நூற்றாண்டு நவீன அடிமைத்தனம்” என்ற நூலில் இதனை விரிவாக விளக்கியிருந்தார். நுவரெலியா மாவட்டத்தை மையமாக வைத்து பதுளை, இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான அதிகார அலகு உருவாக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை காதர் முன்வைத்தார். அவரது மேற்கூறிய நூலின் இறுதிப்பக்கத்தில் மலையக அதிகார அலகுக்கான வரைபடமும் சேர்க்கப்பட்டிருந்தது.
தற்போது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும் என்ற விவகாரம் மேல்நிலைக்குவர மலையக மக்களின் அடையாளம், அரசியல் தீர்வு பற்றிய விவகாரங்களும் மேல்நிலைக்கு வந்துள்ளன. புதிய யாப்பிற்கான யோசனைகள் கேட்க்கப்பட்ட போது மலையக தரப்பில் இருந்து பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அண்மையில் தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய வம்சாவழி மலையக தமிழர் தேசிய அரசியல் அபிலாசை ஆவணக் கோரிக்கைகள் என்ற பெயரில் ஒரு ஆவணத்தைத் தயாரித்து பொது அரங்கில் விட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அந்த ஆவணத்தை பொது அரங்கில் விவாதத்திற்கு கொண்டுவாருங்கள் என இக் கட்டுரையாளரிடம் கேட்டிருந்தார். இன்றைய அரசியல் சூழலில் முக்கிய தரப்பாக கருதப்படுகின்ற தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆவணத்தை வெளியிட்டிருக்கின்றமையால் அரசியல் உலகிலும் அது கவனத்தைப்பெற தொடங்கியுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்னர் இலங்கை அரசியலிலும், மலையக அரசியலிலும் முக்கிய தரப்பாக உள்ள ஒரு கட்சியின் எழுத்துருவில் முன்வைக்கப்பட்ட ஆவணமாக இது இருப்பது பலரின் கவனத்தையும் குவித்துள்ளது.
இக் கட்டுரையாளர் மலையகத்தைத் சேர்ந்தவர் அல்ல. ஆனால் மலையக மக்கள் மீது அக்கறை கொண்டவா.; தேசிய இன ஒடுக்குமுறைகள் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுசெய்பவர் என்ற வகையில் ஒரு புறநிலையாளனாகவே தனது கருத்துகளை முன்வைக்கின்றார். இக் கருத்துக்கள் முடிந்த முடிவல்ல.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆவணத்தை இரண்டு வகையாக ஆய்வு செய்ய வேண்டும.; ஒன்று இந்திய வம்சாவழி மலையகத் தமிழர் தேசியஅரசியல் அபிலாசை ஆவணக் கோரிக்கைகள,; இரண்டாவது அரசியல் தீர்வாக அக்கட்சி முன்வைக்கும் நிலவரம்பற்ற சமூகசபை. இரண்டையும் மலையக மக்களின் நலன்நின்று ஆய்வுசெய்வது அவசியமானது. முதலில் இந்த ஆவணத்தை பரிசீலனை செய்யும் அளவுகோலை சரியாகத் தயாரிப்பது அவசியமானது. மலையக அரசியல் பிரச்சினை என்றால் என்ன என்பது பற்றி ஒரு புரிதலைப் பெறுவது இதற்கு உதவியாக இருக்கும்.
மலையக மக்கள் இலங்கை சமூகப்பரப்பில் தனித்துவ அடையாளம் கொண்ட ஒரு மக்கள் கூட்டமாகவே தங்களைக் கருதுகின்றனர். அவர்களில் ஒருசாரார் ஒருபடிகூடச்சென்று தேசிய இனம் என்றே அடையாளப்படுத்துகின்றனர். எனவே மலையக அரசியல் பிரச்சினை என்பது தனித்துவ அடையாளம் கொண்ட சமூகமாக அல்லது ஒரு தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதுதான். தனித்துவ அடையாளங்கள் அல்லது தேசிய இன அடையாளங்கள் நான்கு தூண்களில்தான் கட்டியெழுப்பப்படுகின்றன. நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம் என்பனவே அத்தூண்களாகும். அத்தூண்கள் அழிக்கப்படுவதுதான் மலையக அரசியல் பிரச்சினையாகும். எனவே மலையக மக்களுக்கான அடையாளமும், அரசியல் தீர்வும் இந்தத் தூண்கள் அழிக்கப்படுவதை பாதுகாப்பதாக இருக்கவேண்டும். உண்மையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினது ஆவணத்தை அளக்கும் அளவுகோல் இதுதான்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆவணத்தில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் தேசியஅரசியல் அபிலாசைக் கோரிக்கைகளாக நான்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13வது திருத்தத்தை முழுமையாக அழுல்படுத்தி மாகாணசபை தேர்தல்களை தாமதமின்றி உடன்நடாத்துதல், தமிழ்மொழிக்கு சமஅந்தஸ்தைக் கொடுக்கும் வகையில் 16வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மகிந்தராஜபக்சவின் சர்வகட்சி மாநாட்டில் முன்மொழியப்பட்ட நிலவரம்பற்ற சமூகசபையை அரசியல் யாப்பு ரீதியாக உருவாக்குதல், தனித்துவ அடையாளம் கொண்ட சமூகமாக மலையக மக்கள் வரக்கூடிய வகையில் ஏற்பாடுகளைச் செய்தல் என்பவையே அக் கோரிக்கைகளாகும்.
தனித்துவ அடையாளம் கொண்ட மக்கள் சமூகமாக வரக்கூடிய வகையில் மத்திய, மாகாண, உள்ளுராட்சி மட்டங்களில் அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளுதல், சமச்சீர் பிரதிநிதித்துவ நோக்கில் அர்த்தமுள்ள விகிதாசார தேர்தல் முறைமையை நடைமுறைப்படுத்துதல், நிலம், வீடு, தொழில், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இழந்த வளர்ச்சிகளை எட்டிப்பிடிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தோட்டக்குடியிருப்பு பிரதேசங்ளை அரச, பொது, நிர்வாக கட்டமைப்பின் கீழ் கொண்டுவருதல் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நிலவரம்பற்ற அதிகாரசபை கோரிக்கையில் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களுக்கு நிலவரம்பற்ற சமூகசபை உருவாக்கப்படல் வேண்டும்என்றும், பாராளுமன்ற மகாணசபை, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கலாம் என்றும,; முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிகளுக்கு சபையின் உறுப்பினர்களாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து தெரிவுசெய்யப்படல் வேண்டும் என்றும், சமூக சபையின் தலைமைச்செயலகம் தேசிய தலைநகரில் அமைக்கப்படல் வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில், மாகாணசபைகளில் சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் இச்சபைகளிலும் முன்வைக்கப்படல் வேண்டும். என்றும் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, கலாச்சாரம், அபிவிருத்தி வீடமைப்பு, வாழ்வாதாரம் என்பவற்றில் பங்குபற்றல் அதிகாரங்கள் இருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சமூகசபைக்கு ஆலோசனை வழங்க ஆலோசனைக்குழு இருக்கவேண்டும் என்றும், சபைக்கான நிதி மத்தியவரவு செலவுத்திட்டத்திலிருந்து ஒதுக்கப்படல் வேண்டும் என்றும் வெளிநாட்டு உதவிகளைப்பெறும் அதிகாரம் இருத்தல் வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்முற்போக்குக்கூட்டணியின் இந்த ஆவணம் – மலையக மக்கள் எதிர்நோக்கும் பல அரசியல் பிரச்சினைகளை தொட்டுக்காட்டியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் மலையக மக்களை அடையாள அழிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு போதுமானதா என்பது மிகப்பெரிய கேள்வியாகும்.
முதலில் அடையாளத்தைப் பார்ப்போம். இந்திய வம்சாவழி மலையகத்தமிழ் இலங்கையர் என்ற அடையாளமே இங்கு முதன்மைப்படுத்தப்படுகின்றது. இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளம் தேவையானதா? என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. இக் கட்டுரையாளர் மலையக தமிழர் என்ற அடையாளமே சிறந்தது எனக் கருதுகின்றார்.அதற்கான காரணங்களில் முதலாவது இலங்கையில் இருக்கின்ற ஒருசிலரைத்தவிர ஏனைய அனைவரும் இந்தியாவில்இருந்து வந்தவர்களே! மலையக மக்கள் சற்றுத் தாமதமாக வந்தனர் எனலாம். தாமதமாக வந்தவர்கள் என்பதற்காக இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளம் அவசியமானதா? ஏறத்தாழ மலையக மக்கள் வருகை தந்த காலத்தில் பிரித்தானிய இந்தியாவிலிருந்து வருகைதந்த முஸ்லீம்கள் தங்களை இந்திய வம்சாவழி முஸ்லீம்கள் என அழைப்பதில்லை. மலையக மக்கள் மட்டும் ஏன் அவ்வாறு அழைக்க வேண்டும்.
இரண்டாவது மலையக மக்களில் எட்டாவது தலைமுறையினரே தற்போது இலங்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோருக்கு இந்தியாவுடன் எந்தவித தொடர்பும் கிடையாது. தமது வாழ்வில் இந்தியாவிற்கு செல்லாதவர்கள் கூட பலர் உள்ளனர். அவர்களது வாழ்வுமுழுவதும் மலையகமும், இலங்கையும் சார்ந்ததே அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் இந்தியக் காரணி பெரியளவிற்கு பங்களிப்பு செலுத்தியதில்லை.
மூன்றாவது மலையகத்தை வளம்கொளிக்கும் பூமியாக மாற்றியவர்கள் மலையக மக்களே! தற்போதுள்ள தலைமுறையினருக்கு மலையகமே அவர்களது தாயகம்.
நான்காவது இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளம் மலையக மக்களை உளவியல் ரீதியாக அந்த மண்ணிலிருந்து அந்நியப்படுத்திவிடும். மலையகம் எமது தாயகம் என்ற கோரிக்கையையும் பலவீனப்படுத்திவிடும். இலங்கையின் ஏனைய தேசிய இனங்களில் இருந்தும் அந்நியப்படுத்திவிடும்.
ஐந்தாவது சிங்கள மக்கள் வரலாற்று ரீதியாகவே இந்தியாவை எதிரியாகப் பார்க்கின்றனர். பெரும்தேசியவாதம் மேற்குலக எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு என்பவற்றிலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளம் சிங்கள மக்களுடனான உறவிலும் பாதிப்பை செலுத்தப்பார்க்கும்.
ஆறாவது மலையக மக்கள் இன்று ஏனைய தேசிய இனங்களுடன் இணைந்து இலங்கையர் என்ற பொது அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மலையகத் தமிழராகவும், இலங்கையராகவும் வாழ்தல் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளம் இந்த முயற்சியையும் பலவீனப்படுத்திவிடும்.
இந்தியர் என்ற அடையாளத்தை தவிர்ப்பதற்காகவே தலைவர் தொண்டமான் இலங்கை – இந்தியர் காங்கிரஸ் என்ற அமைப்பின் பெயரை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றினார்.
எனவே சகல வழிகளிலும் பொருத்தமான அடையாளம் மலையகத் தமிழர் என்பதுதான்.
இது பற்றி உரையாடல் பன்முகப்பட்டதாக இருப்பது ஆரோக்கியமானது.
அடுத்தவாரம் நிலவரம்பற்ற சமூகசபை பற்றிப்பார்ப்போம்.