புதிய ஆண்டு பேச்சுவார்த்தைகளோடு தொடங்குகின்றது.புத்தாண்டு பிறந்த கையோடு மூன்று அல்லது நாலு நாட்களுக்கு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் என்பதே வெளியுலகத்தை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான்.அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் சீரியஸ் ஆக இருக்கிறது என்பதை காட்டுவதற்கான ஓர் உத்தி அது. அவ்வாறு காட்டவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு. ஏனெனில் இப்பொழுது நடக்கும் பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைத் தர வேண்டும் என்பதை விடவும், பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தைப் பிணை எடுக்கக்கூடிய நாடுகளை கவர்வதற்கான ஒரு ஏற்பாடுதான்.
மோதலில் ஈடுபடும் தரப்புகள் அல்லது பிணக்கிற்கு உட்பட்ட தரப்புகள் எப்பொழுது பேச்சுவார்த்தைக்கு வரும் என்றால்,அரசியல் வலுச்சமநிலை மாறும் போதுதான்.அரசியல் வலுச்சமநிலையை போரின் மூலமும் மாற்றலாம். மக்கள் போராட்டங்களின் மூலமும் மாற்றலாம்.தேர்தல் முடிவுகளின் மூலமும் மாற்றலாம்.இலங்கைத்தீவின் வலுச்சமநிலை பொருளாதார நெருக்கடியின் விளைவாக தோன்றிய தன்னெழுச்சி போராட்டத்தின்மூலம் மாற்றப்பட்டு விட்டது. தன்னெழுச்சி போராட்டங்கள் சிங்கள பௌத்த கடுந்தேசிய வாதத்தை பதுங்க செய்துவிட்டன.சிங்கள பௌத்த கடுந்தேசியவாதமானது சிங்கள பௌத்த லிபரல் முகமூடியின் பின் மறைவெடுத்து நிற்கிறது. தாமரை மொட்டுக் கட்சி ஒற்றையானைக்கு பின் பதுங்கி நிற்கின்றது.இதனால் ஏற்பட்ட வலுச்சமநிலை மாற்றம்தான் ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்குக் காரணம்.
இதைத் தமிழ்த்தரப்பின் நோக்குநிலையில் இருந்து சொன்னால், பேச்சுவார்த்தைக்கான அரசியல் வலுச்சமநிலை இலங்கைத்தீவில் உருவாக காரணம் தமிழ்த்தரப்பின் போராட்டங்கள் அல்ல.தமிழ்த்தரப்பு பலமடைந்ததாலும் அல்ல.மாறாக சிங்களத்தரப்பு தனக்குள்தானே மோதி பலவீனம் அடைந்ததே காரணம்.இவ்வாறு சிங்களத் தரப்பு பலவீனமடைந்ததால் இலங்கைத்தீவின் அரசியல் வலுச்சமநிலை மாற்றம் கண்டுள்ளது.இதை பயன்படுத்தி வெளிநாடுகள் இலங்கைத்தீவின் மீதான தமது பிடியை மேலும் இறுக்க முற்படும்பொழுது இத்தீவின் அரசியல்,ராணுவ,பொருளாதார வலுச்சமநிலையில் மேலும் மாற்றம் வரலாம்.
உதய கம்மன்பில அதைத்தான் “பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின்,30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்”என்று கூறியிருக்கிறார்.
கஜேந்திரக்குமார் அதைத்தான் தமிழ் நோக்குநிலையில் இருந்து கூறியிருக்கிறார்.அதாவது பொருளாதார நெருக்கடி காரணமாக சிங்களத்தரப்பு பலவீனம் அடைந்து விட்டது, அதனால் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருகிறது, எனவே தமிழ்த் தரப்பு தனது பேரத்தை பலப்படுத்த வேண்டும் என்று.
ஆனால் இது தமிழ்த்தரப்பின் போராட்டத்தாலோ அல்லது அதிகரித்த பலத்தாலோ ஏற்பட்ட வலுச்சமநிலை மாற்றம் அல்ல.இந்த வலுச்சமநிலை மாற்றத்தில் அரசாங்கத்துக்கு உதவி புரியும் நாடுகளின் அழுத்தமும் ஓரளவுக்கு உண்டு.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும் இனப்பிரச்சனைக்கான தீர்வும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன.அதேசமயம் நடந்து முடிந்த ஜெனிவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடும் அதுவாக இருந்தது.எனவே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்தின் மீது உண்டு. அதுவும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன என்று ஒரு தோற்றத்தை கட்டியெழுப்பக் காரணம். எனவே இதில் தமிழ்த்தரப்பின் பேரபலம் என்பது முதலாவதாக சிங்களத்தரப்பின் வீழ்ச்சியாகவும்,இரண்டாவதாக வெளி உலகத்தின் அழுத்தமாகவும் காணப்படுகிறது.
அதனால் பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்போடு பார்க்கும் வெளியுலகத்திற்கு தமிழ்த்தரப்பு அதில் ஈடுபடும்-என்கேஜ்-engage-பண்ணும் என்ற செய்தி கொடுக்கப்பட வேண்டும். இதன்பொருள் மேற்கு நாடுகள் ஒரு தீர்வை பெற்று தரும் என்பதல்ல.மாறாக,நவீன ராஜதந்திரவியல் எனப்படுவது என்கேஜ்மென்ட்தான்.இந்த அடிப்படையில்,ஒரு தரப்பாக சிந்தித்தால், ஒரு தேசமாக சிந்தித்தால்,பேச்சுவார்த்தையில் என்கேஜ் பண்ண வேண்டும்.தவிர தமிழ்த்தரப்பிடம் நாட்டில் சொந்தமாகப் பலம் எதுவும் கிடையாது.அந்த பலத்தின் காரணமாக வலுச்சமநிலை மாறவும் இல்லை. எனவே தன் பலம் எதுவென்று கண்டு தமிழ்த்தரப்பு பேச்சில் ஈடுபட வேண்டும். அதன்பொருள் பேச்சுவார்த்தையை இதயபூர்வமாக நம்ப வேண்டும் என்பதல்ல. இதுவிடயத்தில் “என்கேஜ் அண்ட் எக்ஸ்போஸ்” அதாவது ஈடுபட்டு அதை அம்பலப்படுத்துவது என்ற ஒரு தந்திரத்தை தமிழ்த்தரப்பு கடைப்பிடிக்க வேண்டும்.
சிங்களபௌத்த பெருந்தேசியவாதத்தின் கடும்போக்குவாதிகள் லிபரல் முகமூடி அணிந்த ஒற்றை யானைக்கு பின் பதுங்குகிறார்கள்.அவர்களுக்கு உலக அங்கீகாரத்தை பெறுவதற்கு அந்த ஒற்றை யானைய ஏற்பாடு செய்யும் பேச்சுவார்த்தை என்ற தோற்றமாயை தேவை.எனவே அதைப் பயன்படுத்தி பதுங்கியிருக்கும் சிங்களபௌத்த பெருந்தேசியவாதத்தின் கடும்போக்காளர்களை ஒரு தீர்வை நோக்கி வளைத்தெடுக்கலாம் என்று மேற்கு நாடுகள் நம்பக்கூடும்.
அந்த நம்பிக்கை தமிழ் மக்களின் சுமார் ஒரு நூற்றாண்டு கால அனுபவத்துக்கு பொருந்தி வரவில்லை என்பதனை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்த்தரப்புக்கு உண்டு.எனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எதிர்த்தரப்பை அம்பலப்படுத்த வேண்டும்.அதுதான் இப்பொழுது உயர்ந்திருக்கும் தமிழ் தரப்பின் பேரத்தை தொடர்ந்து உயர்வாக வைத்திருக்க உதவும்.
பன்னாட்டு நாணயநிதியத்தின் உதவிகள் எதிர்பார்த்த வேகத்தில் கிடைக்கவில்லை.மேலும் அந்த உதவிகள் கடனை அடைக்க போதுமானவை அல்ல.ஆனால் அந்த உதவிகள் கிடைத்தால் ஏனைய நாடுகளிடம் உதவி பெறத் தேவையான அங்கீகாரம் அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடும்.எனவே அந்த அங்கீகாரத்தை நோக்கி உழைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு.இந்த அடிப்படையில் பார்த்தால் அரசாங்கம் மேற்குநாடுகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
அதனால் ரணில் விக்கிரமசிங்க முன்பு 2015இல் இருந்து 2018வரையிலும் முன்னெடுத்த நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை ஒரு புதிய வடிவத்தில் முன்னெடுக்க முயற்சிப்பதாக தெரிகிறது.தென்னாபிரிக்கப் பாணியிலான நல்லிணக்கப் பொறிமுறை என்ற உரையாடல் அதைத்தான் குறிக்கிறது. ஆனால் நிலைமாறுகால நீதி என்பது இலங்கைத்தீவைப் பொறுத்தவரையிலும் ஓர் அழகிய பொய்யாகிவிட்டது. ரணிலோடு நிலைமாறுகால நீதியின் பங்காளியாகச் செய்யப்பட்ட கூட்டமைப்பின் பேச்சாளர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வவுனியாவில் வைத்துச் சொன்னார்….”6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனையை முயற்சி செய்தோம்.அதில் தோற்றுவிட்டோம்.” என்று.அவ்வாறு ஏற்கனவே இந்த நாடு பரிசோதித்து தோல்வி கண்ட ஒரு விடயத்தை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க கையில் எடுக்கப் போகிறாரா ?
முன்னைய நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின்போது கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்து யாப்புருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டது.ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அமர்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறிய வார்த்தைகளை இங்கே தமிழ்த்தரப்பு மீட்டுப் பார்க்க வேண்டும்.“சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காண வேண்டும். அவரைப் போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் தெரிவித்திருந்தார்.அது உண்மை.ஏனென்றால் அந்தளவுக்கு சம்பந்தர் விட்டுக் கொடுத்தார்.பிளவுபடாத பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள் தீர்வு என்று சம்பந்தர் காயத்திரி மந்திரம் போல திரும்பத்திரும்பச் சொன்னார்.ஆனால் அது எதுவுமே மகிந்த அணியை சமாதானப்படுத்தவில்லை.அவர்கள் யாப்புருவாக்க முயற்சியை இடைக்கால வரைபோடு குழப்பினார்கள்.
இப்பொழுது மறுபடியும் சம்பந்தர் விட்டுக்கொடுக்கப் போகிறாரா இல்லையா என்பதனை தமிழ்மக்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.டிலான் வழங்கிய பாராட்டு பத்திரத்தை விடவும் தமிழ் மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் சம்பந்தருக்கு வழங்கிய தண்டனை பெரியது.
எனவே கூட்டமைப்பு இம்முறை ஏனைய கட்சிகளோடு இணைந்து திட்டவட்டமாக சில முடிவுகளை எடுக்கவேண்டும்.முதலாவதாக பேச்சுவார்த்தைக்கான கட்டமைப்பை மறுகட்டமைப்பை செய்ய வேண்டும் இப்பொழுது நடந்து கொண்டிருப்பது சர்வகட்சி மாநாடு.அது வெளித்தோற்றத்திற்கு எல்லாக் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்கும் ஒரு ஜனநாயக ஏற்பாடாக தோன்றலாம். ஆனால் கடந்த 75 ஆண்டுகால அனுபவம் என்னவென்றால், இனப் பிரச்சினைக்கான தீர்வு பொறுத்து எல்லா சர்வகட்சி மாநாடுகளும் ஏமாற்று வித்தைகளே.எனவே பேச்சுவார்த்தைகளை பிணக்குக்கு உட்பட்ட தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளாக மாற்ற வேண்டும். அதன்படி தமிழ்த்தரப்பு சிங்களத் தரப்புடனும் முஸ்லிம் தரப்புடனும் பேச வேண்டும்.அரசாங்கமே சிங்களத் தரப்பை பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும். எல்லா கட்சிகளையும் கூட்டிக்கொண்டு வந்து சர்வகட்சி மாநாடு என்று சொல்லி குழப்பியடிக்க முடியாது. சிங்களக் கட்சிகளை சமாளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குரியது.அரசாங்கத்தோடு நிற்கும் தமிழ்க் கட்சிகளையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசு தரப்பாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு பேச்சுவார்த்தைகளை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும்.
அடுத்த கட்டமாக மூன்றாவது தரப்பை உள்ளே கொண்டு வர வேண்டும். இந்தியாவும் உட்பட மேற்கு நாடுகளை இணைத்தலைமை நாடுகளாக உள்ளே இறக்க வேண்டும்.அண்மையில் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல் ஹெய்ம் கூறியிருக்கிறார்….மூன்றாவது தரப்பு தேவையில்லை என்று.அது அவருடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.அதுவே தமிழ்தரப்பின் அபிப்பிராயமாக இருக்கத் தேவையில்லை.
இவ்வாறு பேச்சுவார்த்தைகளை மறுக்கட்டமைப்பு செய்துவிட்டு பேசத் தொடங்கலாம்.ரணில் விக்கிரமசிங்க தயாரிக்கும் நாடகத்தில் பங்காளிகளாக இணைவதா அல்லது தமது மக்களுக்கு விசுவாசமாக இருப்பதா என்பதை தமிழ் கட்சிகள் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.போன தடவை நிலைமாறுகால நீதியின் பங்காளிகளாக மாறப் போய் ஆறு ஆசனங்களை இழந்த கூட்டமைப்பு இனிமேலும்“பிளவுபடாத பிரிக்கப்பட முடியாத இலங்கைத் தீவுக்குள்” என்று உச்சாடனம் செய்யத் தேவையில்லை.டிலான் பெரேராக்களின் பாராட்டுப் பத்திரமா? அல்லது அல்லது தமது சொந்த மக்களின் தோல்வியா? என்பதனை தீர்மானிக்க வேண்டிய ஆண்டு இது.