வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் முடிவுகள் சில நேற்றிரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 244 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், செட்டிகுளம் பகுதியில் இருந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளது. அத்துடன், வவுனியா, கற்குழி பகுதியில் வசிக்கும் 76 வயது நபர் ஒருவர் வீட்டில் மரணமடைந்த நிலையில் நேற்று வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றுடன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சேர்க்கப்பட்ட 86 வயதுடைய சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் மரணித்த மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.