களனி, ஈரியவெட்டிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை கொகேய்ன் போதைப்பொருள், விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கார் ஒன்றில், ஆசனத்தில் தலைவைக்கும் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 கிராம் 510 மில்லிகிராம் கொகேய்ன் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத இறக்குமதிசெய்யப்பட்ட சுமார் 5 இலட்சம் ரூபாவை விட அதிக பெறுமதியான ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பில், இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இதன்போது, கைதான பிரதான சந்தேகநபர், இரண்டு மாதங்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தப் போதைப்பொருள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னணியில், இலங்கையிலிருந்து தப்பிச்சென்று டுபாயில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அது தொடர்பில் கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், குறித்த போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன