கொழும்பு – யாழ் புகையிரத சேவை நாளை முதல் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து சேவையில் மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.

வவுனியா – அனுராதபுரம் வரையான பாதை திருத்த வேலை காரணமாக குறைந்தது ஆறு மாதங்களுக்கு இந்தத் திருத்த வேலைகள் நடைபெற இருப்பதனால், புகையிரத சேவையானது இடைநிறுத்தப்படுகின்றது.

அந்த வகையில் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, புகையிரத திணைக்களத்தினருடன் இணைந்து சில மாற்று நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.

என்ன மாற்றங்களை செய்யலாம் என்பதை தீர்மானித்து மூன்று வகையான தீர்மானங்களை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.

1. யாழ்ப்பாணத்திலிருந்து செல்கின்ற யாழ்ராணி தற்பொழுது முறிகண்டி வரை பயணிக்கின்றது. வவுனியா வரை செல்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரம் சென்று புகையிரதத்தில் கொழும்பு செல்ல விரும்புவோருக்காக வவுனியா – அனுராதபுரத்திற்கு 20 பேருந்துகள் மேலதிகமாக சேவையில் ஈடுபடவுள்ளன.

2. தனியார் போக்குவரத்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து நேரடியாக அனுராதபுரத்திற்கு சென்று அங்கே பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியவாறு ஒழுங்கு செய்திருக்கின்றோம்.

3. நேரடியாக பேருந்துகளிலே கொழும்புக்கு செல்லக்கூடியவாறான ஏற்பாடுகளும் செயற்படுகின்றது” – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews