வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இறுதி நிமிடத்தில் ஒத்திவைப்பதற்கான ஆயத்தங்களில் அரசாங்கம் இன்னமும் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, தேர்தலை நடத்துவதற்கு தேவையான பணம் இன்னும் திறைசேரியில் இருந்து பெறப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வேட்புமனுக்கள் கோரப்பட்டதன் பின்னர் திறைசேரியில் இருந்து தேவையான தொகை கிடைக்கும் என நம்புவதாகவும், தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.