ஆய்வுகூடத் தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் பகிஷ்கரிப்பால் வடக்கில் சுகாதாரதுறை முடங்கியது
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் நலன்புரி சங்கம் அவசர உதவி
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி) பணிப் பகிஷ்கரிப்பால் வடக்கில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்க மறுப்பதன் காரணமாகவே அவர்கள் தமது வேலைநாள்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு, போயா மற்றும் மேலதிக நேரங்களில் கடமையாற்றாது தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளார்கள்.
இதனால், சகல நோயாளர்களும் இலவச சேவையைப் பெறுவதாயின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டியுள்ளது. வடக்கின் யாழ்.மாவட்டத்தில் நான்கு பாகங்களிலுமுள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து 17 கிலோ மீற்றர் தூரத்திலும், மந்திகை ஆதார வைத்தியசாலையிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரத்திலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலிருந்து 20 கிலோ மீற்றர் தூரத்திலும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையிலிருந்து 25 கிலோமீற்றர் தூரத்திலும் யாழ்.போதனா வைத்தியசாலை அமைந்துள்ளது. இவ்வளவு தூரத்துக்கு வாகனங்களில் பயணம் செய்து நோயாளர்களால் பரிசோதனைகளைப் பெறமுடியாது நோயாளர்கள் அவதியுறுகின்றனர்.
இந்நிலையில், அவர்களின் நிலைமையை உணர்ந்த தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம், தமது வைத்தியசாலை நோயாளர்களுக்கு வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தனியார் ஆய்வுகூடத்தில் சோதனைகனை மேற்கொண்டு அதற்குரிய பணத்தை நலன்புரிச் சங்கத்தின் ஊடாக வழங்கி உதவுகின்றார்கள். இன்று மதியம் வரைக்கும் மட்டும் 10 இற்கு மேற்பட்ட நோயாளர்களின் சோதனைக்கு நலன்புரிச் சங்கத்தினர் பண உதவிகளை வழங்கியுள்ளார்கள்.
இதேநேரம், யாழ். மாவட்டத்துக்கு வெளியே வவுனியாஈ முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நோயாளர்கள் படும் அவலத்துக்குத் தீர்வு கிடையாது.
ஏனைய மாகாணங்களில் இல்லாது வடக்கில் மட்டும் பூதாகாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதம செயலாளர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்து, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையில் மக்களை மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளாமல் ஆக்கபூர்வமாகச் செயற்படவேண்டும் என்று நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.