
போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் குறித்த கவனயீர்ப்பு முன்னெடுத்தப்பட்டது.
பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பாரதிபுரம் மத்திய வீதி ஊடக பாடசாலை முன்றலை அடைந்ததும் நிறைவடைந்தது.
குறித்த பேரணியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதை கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிலிருந்து சமூகம் விடுபட வேண்டும் என்பதற்காகவும் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன், கவனயீர்ப்பும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு பேரணியில் அனைத்து வயதினரும் ஒருமித்து கலந்துகொண்டமை பாரதிபுரம் பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





