இந்தியாவில், பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தின் மயூரேஸ்வர் பகுதியில் ஆரம்பப்பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பாடசாலையில் நேற்றுமுன்தினம் (ஜன 09) மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், சுமார் 30 மாணவர்கள் வாந்தி எடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மாணவர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளார். அவரும் நலமுடன் உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மயூரேஸ்வர் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் திபெஞ்சன் ஜனா கூறுகையில், “பாடசாலையில் உணவு சாப்பிட்ட குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாக கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து மாவட்ட ஆரம்பப் பாடசாலை ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக பாடசாலையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, மாணவர்களுக்கு உணவு வழங்கிய பாத்திரத்தில் பாம்பு ஒன்று கிடந்ததும், அதுதான் மாணவர்களின் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் என்றும் தெரியவந்தது” என்றார். இதனிடையே, மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர் இருசக்கர வாகனத்தில் வந்த பாடசாலையின் தலைமை ஆசிரியரை தடுத்து நிறுத்தி, அவருடைய வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.