கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பான புதிய சட்டமூலத்துக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களில் எமது கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமிர கொஸ்வத்த, அனைத்து பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே, ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் பதுளை தல்தெனயை அண்மித்து அமைந்துள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்.
சமீர கொஸ்வத்தவை ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதியே கைதுசெய்தனர். இன்று ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி. அவரை கைதுசெய்து 24 தினங்கள் கடந்துள்ளன.
அதேபோன்று அமில சந்தீப்பவை அழைத்துச் சென்று பின்னர் கைதுசெய்தமை ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி. அவரை கைதுசெய்து 22 தினங்கள் ஆகின்றன. அவர் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.
இதேவேளை வசந்த முதலிகே, ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை கைதுசெய்தும் 21 தினங்கள் கடந்துள்ளன. அவரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.
எனவே 14 நாட்களுக்கும் அதிகமாக தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இருந்த மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆர்ப்பாட்டங்களுக்கு ஊடாகவே கொரோனா வைரஸ் பரவியதாக ஒவ்வொரு முறையும் கூறுவதற்கு முயற்சித்தனர்.
ஆர்ப்பாட்டங்களுக்கூடாக கொரோனா பரவுகிறது, ஆர்ப்பாட்ட கொத்தணி உருவாகிறது, ஆசிரியர் கொத்தணி உருவாகிறது என்று கூறி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மரணிக்கவும் முயன்றனர்.
ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டக்காரருக்குக் கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை.