பொலிஸார் எனக்கூறி 18 வயதான இளைஞனை கடத்திச் சென்று அவரிடம் இருந்த மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்ற நபர்கள் குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனிடம் தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்திக்கொண்ட நபர்கள், இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றுள்ளனர்.
இடைநடுவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, இளைஞனிடம் இருந்த மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு, இளைஞனை வீதியில் கைவிட்டு சென்றுள்ளனர்.
மேலும் இளைஞனிடம் இருந்த 600 ரூபா பணத்தையும் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இளைஞனை கடத்திச் சென்று தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர் சம்பவம் தொடர்பாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.