
ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் படகு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தால் செய்யப்பட்ட தெப்பம் படகு ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியது. இது குறித்து மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் படகினை தங்கச்சிமடம் காவல் நிலைய போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரை ஒதுங்கிய தெப்பப் படகினை போலீசார் ஆய்வு செய்தபோது, மரச் சட்டங்களை கொண்டு தெப்பம் வடிவில் படகு வடிவமைக்கப்பட்டு, அதில் புத்தர் சிலை மற்றும் புத்தர் படங்கள், பூஜைப் பொருட்கள் இருந்தது.
மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா நாடுகளில் இது போன்ற தெப்பங்கள் புத்தமத திருவிழாக்களின் போது தயாரித்து கடலில் விடப்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் படகில் எழுதப்பட்ட பர்மிஸ் எழுத்துகளைக் கொண்டு இந்த தெப்பம் மியான்மர் நாட்டில் இருந்து சுமார் ஆயிரம் கி.மீ தூரத்தில் இருந்து வங்கக் கடலில் நீரோட்டத்தின் மூலம் தெப்பம் திசை மாறி ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைக்கு வந்திருக்கலாம் என தெரிய வருகிறது.
படகில் மர்ம நபர்கள் யாரும் வந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கரை ஒதுங்கிய தெப்பப் படகை அப்பகுதி பொது மக்கள், மீனவர்கள், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டதுடன், அந்த தெப்ப படகுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.




