மட்டு மாநகரசபைக்காக சுயேச்சைக்குழுவில் போட்டியிட இருந்த முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் எஸ். சிவலிங்கம் திங்கட்கிழமை நள்ளிரவு வெள்ளை காரில் ரி.எம்.வி.பி கட்சியினரால் கடத்திசென்று தேர்தல் பத்திரத்தில் அச்சுறுத்தி கையொப்பம் இட்டுள்ளதாக கல்குடா தொகுதி முன்னாள் அமைப்பாளரும் பிரபல வர்தகருமான ஆறுமுகன் ஜெகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் ஜக்கிய தேசிய கட்சியால் மக்களுக்கு அபிவிருத்தி எதுவும் செய்ய முடியாத நிலையில் அதில் இருந்து வெளியேறி மக்களின் ஆணைப்படி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுயேச்சைக் குழுக்களை அமைத்து போட்டியிடுவதற்கான செயற்பாட்டில் முன்னெடுத்து வருகின்றோன்.
இந்த நிலையில் மட்டு மாநகர சபைக்காக கல்லடி திருச்செந்தூர் 12 வது வட்டாரத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர் எஸ். சிவலிங்கம் என்பவரை தெரிவு செய்து அவரின் சுயவிருப்பத்துடன் அந்த வட்டாரத்தில் போட்டியிடுவதற்கான எல்லா ஏற்பாடும் செய்தவந்தோம்.
இவ்வாறான நிலையில் இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சி. சந்திரகாந்தன் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாங்கள் தெரிவு செய்த வேட்பாளரான சிவலிங்கத்தை 16ம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து வெள்ளை காரில் வற்புறுத்தி கடத்திச் சென்று ரி.எம்.வி.பி கட்சி தலைமை க்காரியாலயத்தில் வைத்து அவர்களுடைய கட்சியில் போட்டியிமாறு தோதல் பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
இவ்வாறான அடாவடித்தனமான செயல்பாடு கண்டிக்கப்படவேண்டியதுடன் இதனால் ஏனைய வேட்பாளர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இது தொடர்பாக மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையத்திலும் ஜனாதிபதியிடமும் முறைப்பாடு செய்யவுள்ளதுடன் இதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
இதற்கு ஆதாரமா கடத்தப்பட்ட வேட்பாளரான சிவலிங்கம் என்னுடன் கைதொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரால் தெரிவிக்கப்பட்ட ஆடியோ பதிவு உள்ளது என்பதுடன் இதனை ஆதாரமாக அதிகாரிகளிடம் வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளோன். என்றார்.