கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முழங்காவில் அன்பு புரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட ‘வினிவித பவுன்டேஷன்’ ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் கடல் வளத்திற்கும், கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கையை கடற்றொழில் அமைச்சர் மேற்கொள்ளவில்லை என்று வழக்கு தொடுநர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட சட்டங்களை முழுமையாக பயன்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றிடம் கோரியுள்ளனர்.
இந்த எழுத்தாணை கோரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர எக்கநாயக்க ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.