தற்போதைய தேவை புதிய சிந்தனைகளே! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்….!

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடாத்தப்படும் என நிச்சயமான நிலை இன்னமும் தோன்றவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பதே அடுத்த அடுத்த மாதங்களில் கஸ்டமாக இருக்கலாம் என அரசாங்கம் கூறத் தொடங்கியுள்ளது. உயர்மட்ட அதிகாரிகளின் வேதனங்களை கட்டம் கட்டமாக வழங்குவது பற்றியும் அரசாங்க மட்டத்தில் பேசப்படுகின்றது. ஜனாதிபதி சர்வரோக நிவாரணியாக வெளிக்காட்டும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியிலும் நிச்சயநிலை இன்னமும் உருவாகவில்லை. கடன் மறுசீரமைப்புக்கு சீனா இன்னமும் தயக்கம் காட்டியே வருகின்றது. இதற்கு பலநியாயங்களை சீனா முன்வைக்கின்றபோதும் மேற்குலகின் நிகழ்ச்சிநிரல் மேல்நிலைக்கு வரக்கூடாது என்பதிலும் இந் நிகழ்ச்சி நிரலிற்குள் தான் மாட்டிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பது போன்று தெரிகின்றது.
சீனாவின் தற்போதைய அணுகுமுறை இலங்கையில் தனது இருப்பை பலவீனப்படுத்தக்கூடாது அதேவேளை மேற்குலகின் நிகழ்ச்சி நிரலிற்குள் மாட்டுப்பட்டுவிடக்கூடாது என்பதே. கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு தயக்கம் காட்டி வருகின்றபோதும் இலங்கைக்கான உதவிகளை வழங்குவதில் அது பின்னிற்;கவில்லை. பாடசாலை சீருடை உதவி, உணவுப் பொருட்கள் உதவி என அதன் உதவிகள் தொடர்கின்றன. சீனக் கம்யூனிஸ் கட்சியின் மத்திய குழுவைச் சேர்ந்தவர்கள் இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்படத் தயார் என அறிக்கை விட்டுள்ளனர்.
உள்;ராட்சிச் சபைத் தேர்தலின் நிச்சயமின்மை இருக்கின்றபோதும் தேர்தல் தொடர்பான ஆரவாரங்கள் குறைவதாக இல்லை. இலங்கை முழுவதுமே ஆரவாரங்கள் வெளிக்கிளம்பத் தொடங்கியுள்ளன. தமிழர் தாயகமும் அதற்கு விதிவிலக்காக இல்லை. தமிழக்கட்சிகள் ஆள்பிடிக்கும் வேட்டையைத் தொடங்கியுள்ளன. ஆள்பிடிப்பதற்கு அவை அலைவதைப் பார்க்கும்போது கவலையாகவும் இருக்கின்றது. பெண் வேட்பாளர்களைத் தேடிப்பிடிப்பதுதான் மிகவும் சிரமாகவே உள்ளது. தேர்தலில் போட்டியிட்டால் தமக்கு திருமணமே நடக்காது என ஒதுங்கியுள்ள பெண்களும் உண்டு.
தேர்தலின் நிச்சயமின்மை காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்கள் தேர்தல் பக்கம் வருகின்றார்களே இல்லை. ஆள் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கும் வாக்குகளைத் திரளாக கொண்டுவருவதற்கும் மண் கொள்ளைக்காரர், மணற் கொள்ளைக்காரர், வாள்வெட்டுக்காரர் போன்ற சமூக விரோதிகளும் வேட்பாளர்களாக உள்வாங்கப்படுகின்றனர் என செய்திகளும் வருகின்றன. கிளிநொச்சியில் போட்டியிடும் பிரதான கட்சி தொடர்பான இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
தென்னிலங்கையில் பாதாள உலகக்கோஸ்டிகளைச் சேர்ந்தவர்கள் உள்;ராட்சிச் சபைத் தேர்தல்களில் முன்னிலைப்படுத்தப்படுவதுண்டு. பாராளுமன்றத் தேர்தல்களில் அவர்கள் திரளாக வாக்குகளைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள் என்பதற்காகவே அவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இந்த நோய் தமிழர் தாயகத்திலும் வந்துவிட்டதா என சந்தேகிக்கத் தோன்றுகின்றது.
உள்;ராட்சிச்சபைத் தேர்தல்களுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிளவுகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதுபோலத் தோன்றுகின்றது. கடந்த உள்;ராட்சித் சபைத் தேர்தல் இரண்டு அணிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளை மூன்று அணிகளாக மாற்றியது. இந்தத் தேர்தல் நான்கு அணிகளாக மாற்றியுள்ளது. இனி வரப்போகும் தேர்தல் 5 அணிகளாகவும் மாற்றலாம். கட்சிகளுக்கு இடையே மட்டுமல்ல கட்சிகளுக்கு உள்ளேயும் இத்தேர்தல் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் தனது ஆதிக்க நிலையை மேல் நிலைக்கு வந்திருக்கின்றார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உள்;ராட்சிசபைத் தேர்தலுக்கு கட்டுப் பணத்தினை அவரும் வலிவடக்கு பிரதேசசபையின் முன்னார் தவிசாளர் சுகிர்தனுமே இணைந்து கட்டியுள்ளனர் எனினும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் அவரால் நுளையவே முடியவில்லை. அங்கு சிறீதரன், சுமந்திரன் சிபார்சு செய்த எவரையும் பட்டியலில் சேர்க்கவில்லை.
சுமந்திரனின் முயற்சியினால் (காலைக்கதிர்) பிரதம ஆசிரியர் வித்தியாதரன் யாழ்பாண மாநகரசபை மேயர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனை யாழ் கத்தோலிக்க தரப்பு எவ்வளவு தூரம் அனுமதிக்கும் எனக் கூறமுடியாது. ஏற்கெனவே நடைமுறையிலுள்ள மாநகரசபையில் மேஜராக வருவதற்கு ஆனோல்ட்க்கும் சிறில்க்குமிடையே கடும் இழுபறி நடக்கின்றது. முடிவுநிலை இன்னமும் உறுதியாகவில்லை.
வலிகாமம் தெற்கு பிரதேசபையின் முன்னாள் தவிசாளராக இருந்த பிரகாஸ் சென்றதடவை சித்தாத்தன்கட்சிக்கு தவிசாளர் பதவியை கொடுத்ததற்காக முரண்;;;;;;பட்டு நின்றார். வாக்கெடுப்பிலும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி எதிராக வாக்களித்தார். கட்சி அவரை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. அவர் அதற்கு எதிராக வழக்கும் தொடுத்திருந்தார். இந்தத் தடவை சுமந்திரன் ஒருவாறு அவரை தாஜா பண்ணி வழக்கையும் வாபஸ் பெற செய்து முதன்மை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
விக்கினேஸ்வரன் கட்சியில் இருந்த அருந்தவபாலனை மீளவும் கட்சிக்குள் கொண்டுவருவதற்கு மணிவண்ணன் எவ்வளவோ முயற்சித்தும் வெற்றி கிடைக்கவில்லை. அவர் உறுதியாக தான் ஒதுங்கிநிற்பதாக குறிப்பிட்டுள்ளார். அனந்தி சசிதரன் கட்சி விக்கினேஸ்வரன் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது. ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக தகவல்கள் வருகின்றன.
கட்சிகளுக்கிடையேயும் கட்சிகளுக்குள்ளேயும் ஏற்படும் பிளவுகள் தமிழ்த் தேசிய அரசியலை மோசமாக பாதிக்கப்போகின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் வெற்றிக்கு மூன்று நிபந்தனைகள் மிகவும் முக்கியமானவை தேசமாகத் திரளுதல், ஒருங்கிணைந்த குரல், கட்டுறுதியான அரசியல் சமூகம் என்பவையே அம் மூன்றுமாகும். இம் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை. அதுவும் தென்னிலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசிய அபிலாசைகளை வெற்றி கொள்வதற்கு இந்த மூன்று நிபந்தனைகளும் மிக மிக அவசியம். தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதற்காக தமிழ் மக்களுக்குள் பிளவுண்ட கட்சிகளையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார். தமிழ் கட்சிகளும் அவரது விருப்பத்தை நிறைவாகவே பூர்த்திசெய்ய முயல்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட பிளவுக்கு ஒரு காரணம் மட்டும் இருக்கப்போவதில்லை. பல காரணங்களின் கூட்டே இருந்திருக்கின்றது. சுமந்திரனின் தலைமைத்துவ ஆசை, பங்காளிக்கட்சிகளின் ஈகோ பிரச்சினை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாய நகர்வுகள், தனக்கான அணியை கட்யெழுப்பவேண்டிய இந்தியாவின் தேவை என கூட்டுக் காரணிகள் பங்களித்திருக்கின்றன.
இவ்வாறான பிளவுகளுக்குள் எதிர்காலத்திலும் ஏற்படாமல் இருப்பது மிக அவசியம். அதற்கு தமிழ்த்தரப்பு சில கோட்பாட்டு முடிவுகளை எடுத்து செயற்படுவது நிபந்தனைகளாக உள்ளன. அதில் முதலாவது தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசிய அரசியலின் ஒரு சிறிய பகுதியே என்ற முடிவுக்கு வருவதாகும். 2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் கட்சி அரசியலும் தேர்தல் அரசியலும் மட்டுமே முன்னிலைக்கு வந்தன. இது தமிழ்த்தேசிய அரசியலில் அதிகரித்த தேக்க நிலையை உருவாக்கியது. பிரதான கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை பின்பற்றியமை தேக்க அரசியலை மேலும் வளர்த்து எடுத்தது. புலம்பெயர் தரப்பின் உறுதியான அரசியல் நிலைப்பாடுகளும், தமிழ்த் தேசிய அரசியல் ஆழமாக வேரூன்றி இருந்த நிலையும்   பெரும் தேசியவாதத்தின் விட்டுக்கொடா நிலையும் மரத்தை முற்றாக வீழ்த்தவில்லை ஆனால் மரத்தில் நோய்கள் பீடித்திருந்தன என்பதை மறைக்க முடியாது.
இரண்டாவது கோட்பாட்டு முடிவு முதலாவதுடன் தொடர்புள்ள ஒன்றுதான். கட்சிஅரசியல், தேர்தல் அரசியல் என்பவற்றினூடாக தமிழ்த்தேசிய அரசியலை வினைத்திறனுடன் கொண்டுசெல்ல முடியாது என்பதே அதுவாகும். கட்சி அரசியலிலும், தேர்தலரசியலிலும் கட்சிகளும் கதிரைகளும் முதலாம் பட்சமானவை. தேசிய அரசியல் இரண்டாம்பட்சமானவை தான். தவிர தேர்தல் அரசியல் என்பதே சமரச அரசியல்தான். தேர்தல் நலன்களுக்காக தேசிய அரசியலையே விலையாகக்கொடுக்கும் நிலையும் ஏற்படலாம்.
உதாரணமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாகாணசபைத்தேர்தல்களை பகிஸ்கரித்தமை தமிழ்த்தேசிய நிலைநின்று எடுத்த கொள்கை முடிவாகும். தமிழ்த்தேசிய அரசியலின் இலக்கையே கொச்சைப்படுத்துகின்ற மாகாணசபை முறையை ஒருபோதும் ஏற்க முடியாது ஆனால் பின்னர் முன்னணி மகாணசபைத்தேர்தல்களில் போட்டியிடும் முடிவை எடுத்தது அது தேர்தல் அரசியலாகும்.
மூன்றாவது கோட்பாட்டு முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் கட்டுப்பாட்டிற்குள் தேர்தல் அரசியலைக் கொண்டுவரவேண்டும் என்பதாகும். தற்போதைய நிலையில் தேர்தல் அரசியல் சிறு பிரிவாக இருந்தாலும் தவிர்க்கமுடியாத பிரிவாகும். தமிழ்த்தேசிய சக்திகள் விரும்பினால் என்ன, விரும்பாவிட்டால் என்ன தேர்தல் அரசியலை கவனத்தில் கொண்டேயாக வேண்டும். சுருக்கமாகக் கூறின் தேர்தல் அரசியலை முழுமையாக ஏற்கவும் முடியாது. முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. தற்போதைய சூழலில் மக்கள் ஆணையை வெளிப்படுத்தும் கருவியாகவும் அது உள்ளது. இதற்காக அது தலைவிரித்து தண்டவம் ஆடுவதையும் அனுமதிக்க முடியாது. இதனை தமிழ்த்தேசிய அரசியலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும்.
தேர்தல் அரசியலை தமிழ்த் தேசிய அரசியலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதென்றால் அதற்கான முதன்மையான வேலைத்திட்டம் கட்சி அரசியலுக்கு வெளியில் தமிழ்த் தேசியத் தளம் ஒன்றை உருவாக்குவதுதான். இக் கட்டுரையாளர் தொடர்ச்சியாகக் கூறுகின்ற ஒரு கருத்து இன்று தமிழ் மக்களுக்கு தேவையானது தேர்தல்களில் கூத்தடிக்கின்ற அரசியல் கட்சிகளல்ல. மாறாக தமிழ் மக்களின் அனைத்து விவகாரங்களையும் உலகம் தழுவிய வகையில் கையாளக்கூடிய தேசிய அரசியல் இயக்கம் ஒன்றை உருவாக்குவதே!
இந்த தேர்தல் அரசியல் இயக்கம் தேர்தல் அரசியலைக் கையாள்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கலாம். வேட்பாளர்களை தெரிவுசெய்யும் பொறுப்பை கட்சிகளிடம் வழங்காமல் கல்வியாளர்கள், சமூகப்பெரியார்கள், மதத் தலைவர்கள் அடங்கிய குழுவிடம் ஒப்படைப்பதே இந்தப் பொறிமுறையாகும் காலப்போக்கில் முன்மாதிரியான ஒரு அரசியல் கட்சி ஒன்றை தேசிய அரசியல் இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட வகையில் உருவாக்குவதை நோக்கி முன்னேறலாம்.
இந்த முன்மாதிரியான கட்சியின் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல்களில் போட்டியிடமாட்டார்கள். ஒருவர் இருதடவை மட்டுமே உறுப்பினராக இருக்கலாம். உறுப்பினர்கள் தங்களது ஊதியங்களை கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும.; கட்சி அவர்களுக்கு உதவித் தொகையினை வழங்கலாம். தேர்தல் செலவினைக் கட்சி பொறுப்பேற்கும்.

Recommended For You

About the Author: Editor Elukainews