
பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம கம்பீரிகஸ்வௌ பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜித் பைஸ் பாத்திமா என்ற 6 வயதுடைய முதலாம் வருட பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அளுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி பாடசாலை முடிந்து வரும் போது பேருந்தில் இருந்து இறங்கும் போது கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பலத்த காயமடைந்த மாணவி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கும் போது திடீரென பேருந்தை கவனக்குறைவாக மீண்டும் சாரதி இயக்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தினையடுத்து பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பரசங்கஸ்வௌ பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் ஜி.எல்.சி. சிறிகாந்தவின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.