ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சர்வகட்சி மாநாட்டை கூட்டவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி மாநாடு இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் நோக்கம் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கும், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்காக கொண்டது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டுக்காக சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 13ஆம் திகதி கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்த நிலையில் இன்று கட்சித் தலைவர்களின் சந்திப்பின் போது, குறித்த விடயங்கள் தொடர்பாக மேலும் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.