நாட்டின் கடனில் ஏறக்குறைய 14 ரில்லியன் ரூபா கடன் சுமையில் இருந்து இன்றைய தலைமுறையின் இறுதி வரை நாட்டை மீட்டெடுப்பது கடினமாகும் என முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நடிகரும், முன்னாள் நாடாமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க, விசேட தேவைகள் மற்றும் பொருளாதார சிரமங்கள் உள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்குவதற்காக 2,000 மடிக்கணினிகளை நன்கொடையாக பெற்றுக் கொண்டு அண்மையில் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பினார்.
இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இளைய தலைமுறையினரிடையே அறிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை உயர்த்த இது சிறந்த வாய்ப்பாகும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிக மனித வளங்கள் உள்ளன. ஆனால் அந்த வளங்களில் பெரும்பாலானவை தொழிலாளர் பிரிவின் கீழ் பயன்படுத்தப்படவில்லை. எனினும், பெரும்பாலான வளர்ந்த நாடுகளில், மக்கள் தங்கள் மனித வளத்தைப் பயன்படுத்தி வீட்டில் தங்கி பில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதிக்கிறார்கள் என்று ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் பாடசாலை மாணவர்களுக்கு கணினிகளை விநியோகிக்க முயற்சித்தன. ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் எந்த அரசியல் கட்சியின் கீழும் வராது மற்றும் எந்த அரசியல்வாதியும் ஆதரிக்கவில்லை. நாட்டின் அனைத்து குடிமக்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.
அரசியலில் ஈடுபடும் உரிமைகள் குறைக்கப்பட்டாலும் சமூக சேவையில் ஈடுபடும் உரிமையை மட்டுப்படுத்த முடியாது எனவும், மடிக்கணினிகளை இலவசமாக விநியோகித்ததாகக் கூறி பல்வேறு சமூக ஊடக தளங்களில் நடத்தப்படும் போலியான நிகழ்ச்சிகளில் பலியாகவோ அல்லது ஈடுபடவோ வேண்டாம் என்றும் ராமநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்