அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்: விவசாய அமைப்புகள் எச்சரிக்கை!

விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேற்று மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மாவட்ட மக்களின் பிரதான தொழில் விவசாயமாக காணப்படுகின்றது. மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது விவசாய அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசினால் இதுவரை நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை. தனியார் வியாபாரிகள் மிகவும் குறை விலையில், 70 கிலோ கொண்ட ஒரு மூடையினை 4500 ரூபாய் முதல் 4700 ரூபாய் வரை கொள்வனவு செய்கிறார்கள். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் விவசாயிகள் மேற்கொண்ட நெற்பயிர்ச் செய்கையின் அறுவடை நெல்லை மிகக் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்கிறார்கள்.

ஏற்கனவே அரசாங்கம் கூறியது போல் ஒரு கிலோ நெல்லை 130 ரூபா நியாய விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம். நெல் சந்தைப்படுத்தும் சபை மூலம் நெல்லை கொள்வனவு செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் அவர்கள் நெல்லை கொள்வனவு செய்யவில்லை. ஒரு கிலோ நெல்லை விவசாயிகள் உற்பத்தி செய்வதற்கு 110 ரூபாவிற்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே எமது விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை விற்று பாரிய நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நெல் பயிர் செய்கையை மேற்கொள்ள கிருமி நாசினி, கலை நாசினி போன்றவற்றை ஏற்கனவே காணப்பட்ட விலையை விட சுமார் 5 மடங்கு அதிக விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு விவசாய செய்கை முன்னெடுத்த போதும் நெல்லை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை நீடிக்குமாக இருந்தால் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எமது விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என தெரிவித்தனர்.

மேலும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் தமது கருத்துக்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews