
– இவ்வாறு வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்நாட்டு போர் காரணமாக இடம்பெயர்ந்து பல வருடங்களாக மீள்குடியேறாத குடும்பங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது இடம்பெற்று வருகின்றன.
யாழ்.மாவட்டத்தை பொறுத்தவரை வலிகாமம் வடக்கிலேயே அதிகளவில் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள்.
18 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவில் விடுவிக்கப்படாமலும் 3 கிராம சேவகர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும் இருக்கின்றன.
7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம் இந்த விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிலும் இந்த விண்ணப்பங்களை பெற்று உடனடியாக நிரப்பி வழங்க வேண்டும்.
இதனை வழங்குவதன் மூலமே மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தி காணிகள் எவ்வளவு மக்களுடையது என்பதை அடையாளப்படுத்த முடியும். மீள்குடியேற்றத்துக்காக மக்கள் இல்லை என்ற கருத்துக்கள் வெளியாகிவரும் நிலையில் உண்மையான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.
ஏற்கனவே விபரங்களை வழங்கி இருந்தாலும் இந்த முறை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்கள் சரியாகப் பேணப்படாமையால் மீள்குடியேற்றம் தாமதமாகி வருகின்றது.
பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு, கட்டுவன், குரும்பசிட்டி ,குரும்பசிட்டி கிழக்கு, வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு , மயிலிட்டித்துறை வடக்கு, தையிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு,பலாலி கிழக்கு,பலாலி தெற்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளையும் முழுமையாக விடுவிக்கப்படாத பலாலி மேற்கு,பலாலி வடமேற்கு,மயிலிட்டித்துறை தெற்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களையும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்” – என்றார்.