
வடமேற்கு பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் 10 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதரஸாவில் இருந்து நேற்று (29.01.2023) 25 முதல் 30 மாணவர்களுடன் பயணம் செய்த படகு கவிழ்ந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இறந்த சிறுவர்கள் ஏழு மற்றும் 14 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 11 பேர் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக சுமை காரணமாக குறித்த படகு கவிழ்ந்திருக்கலாம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஜூலை 18ஆம் திகதி சிந்து ஆற்றின் குறுக்கே திருமண விழாவுக்கு சென்ற படகு கவிழ்ந்ததில் பல பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் நேற்று பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் சுமார் 41 பேர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.