ஊழியர் சேமலாப நிதியை 1 மாதத்திற்குள் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் ஊழியரான வணபிதா ஜோன் தேவசகாயம் முறையற்ற வகையில் தனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் ஊழியர் சேமலாப நிதி வைப்பிடப்படாமை தொடர்பில் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசுவமடு திருச்சபையில் ஊழியராக பணியாற்றிய குறித்த ஊழியர் கடந்த 23.12.2022 அன்று பணிமாற்றம் என தெரிவித்து வெளியேற்றப்பட்டார்.19ம் திகதி கூடிய செயற்குழ உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் என அறிவித்தனர்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பில் அதிர்ப்தி அடைந்த குறித்த ஊழியர் இவ்வாறு முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 1997ம் ஆண்டு முதல் இன்றுவரையான காலப்பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படாமையை கண்டித்த அதிகாரிகள், முறைப்பாட்டாளருக்கான குறித்த தொகையை செலுத்த 1 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர். தவறின் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முறையற்ற இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்த விசாரணையாளர்கள் நியாயப்பாடுகள் இருப்பினும், தமக்கு அதிகாரங்கள் இல்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் தொழில் நியாய சபை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயத்திற்கு புதிய பேராயர் நியமிக்கப்பட்டு பேராயரினால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நிர்வாக நடவடிக்கையில் ஈடுபடும் சிலரால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றமை புதிய பேராயருக்கும், ஆதீனத்துக்கும் அவப்பெயரை தோற்றுவிப்பதாக கவலை வெளியிடப்படுகிறது.