மலையக உரிமை மீட்பு பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காகவே குறித்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் முதற்கட்ட சமூக சேவையாக மஸ்கெலியா தெபட்டன் பகுதி, ஹட்டன் தோட்ட பகுதி மற்றும் ஹார்கில் போன்ற பகுதிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கான உலருணவு நிவாரணம் பொதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதியதோர் முற்போக்கு சிந்தனைகளுடன் அரசியலுக்கு அப்பாற்பட்டு எமது மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் முகமாக பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல சிவில் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மதகுருமார்கள், ஆசிரியர், ஆசிரியைகள், வர்த்தகர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து சமூக நோக்குடன் ‘மலையக உரிமை மீட்பு பேரவை’ என்ற சிவில் அமைப்பை ஆரம்பித்துள்ளோம்.
எமது மலையக மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதற்காக அரசியல் இல்லாமல் சமூக ரீதியில் செயற்படுவதற்காக இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவோர் அரசியவாதிகளும் இணைந்து கொள்ளலாம்.
இன்று பெருந்தோட்ட பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களை தோட்ட நிர்வாகங்கள் அடக்குமுறைகளைக் கையாண்டு அடிமைகளாக வழி நடத்துகின்றனர். அத்தோடு தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் 2,000 ரூபா நிதி திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம்
ஒதுக்கி வைத்துள்ளது.
பெருந்தோட்டப் பகுதிகளில் முழுமையாக தடுப்பூசிகளும் வழங்கப்பபடவில்லை. இன்று கொரொனா தொற்றினால் நாடு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் எத்தனையோ பெருந்தோட்டங்களில் எமது மக்கள் தொழில் இல்லாமலும் வருமானம் இல்லாமலும் பசியும் பட்டினியுமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நிகழ்வுக்கு உதவிகளை வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் பங்குபற்றியவர்களும் உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.