உயர்நீதிமன்ற தீர்ப்பில், தான் குற்றவாளி என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனக்கெதிராக எந்த சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அதனை நான் பொருட்படுத்தாது கட்சியின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவேன்.
கத்தோலிக்க மக்கள் என்மீது வைராக்கியத்துடனோ அல்லது கோபத்துடனோ இல்லை. 15, 16 வருடங்கள் புனித பைபிலை வாசித்தறிந்தவன் நான்.
எனது ஆட்சி காலத்தில் பிரிதொரு தரப்பு செய்த துர்சம்பவம் காரணமாக உடல் உபாதைக்கு உள்ளாகியுள்ள, பாதிக்கப்பட்டத் தரப்பினரிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன்.
எனது ஆட்சி காலத்தில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதை இட்டு நான் மனவருத்தம் அடைகின்றேன்.
எனது ஆட்சிகாலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் என்று நான் அறிந்திருக்கவில்லை. இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் கத்தோலிக்க மக்களிடமும் நான் மன்னிப்புக்கோருகின்றேன்.
உயர்நீதிமன்ற தீர்ப்பில், நான் குற்றவாளி என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அதிகாரி ஏதேனும் தவறிழைத்தால் ஜனாதிபதியே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். எனவே உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் அவ்வாறான தீர்ப்பையே நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எனவே அழுத்தங்களைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல. எனக்கெதிரான எந்த சதித்திட்டங்களுக்கும் நான் அஞ்சப்போவதில்லை. நீதிமன்றத்துக்கு நான் மதிப்பளிக்கின்றேன்.
சட்டத்துக்கு மதிப்பளிக்கின்றேன்.
நீதிமன்றத்துக்கு தலை வணங்குகின்றேன்.
நெல்சன் மண்டேலாவின் கதைகளை நான் நன்கு வாசித்தறிந்தவன். எனவே எத்தகைய துன்பங்களை எனக்கு தந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் எனது கட்சியின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நான் எதிர்கொண்டு வெற்றிக்கொள்வேன்.