கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடகவியலாளர் நிற்சிங்கம் நிபோஜன் தொடருந்து விபத்தில் அகால மரணமடைந்தமை ஊடகப் பரப்பிலேயே மிகப் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என யாழ். ஊடக மன்றம் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,நீண்ட காலமாக தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட ஊடக பரப்பிலே துரிதமாகவும் உண்மை தன்மையுடனும் செய்திகளை வழங்கி வந்த ஊடக நண்பன் நிபோஜனின் இழப்பு ஊடக பரப்பிலே மிக்க துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களாக டான் தொலைக்காட்சி செய்தியாளராகவும் பின்பு லங்காசிறி இணைய ஊடகத்தில் செய்தியாளராகவும் சக்தி தொலைக்காட்சி (நியூஸ் பெஸ்ரின் ) கிளிநொச்சி மாவட்ட பிராந்திய செய்தியாளராகவும் கடமையாற்றி வந்த நிபோஜன் , இறுதி காலங்களில் சுற்றுலாத்துறை சார்ந்த இணையதளத்தினை உருவாக்கி அதன் ஊடாக சுற்றுலாத் துறை சார்ந்த கானொளிகளை பதிவேற்றி வந்தார்.
இவ்வாறு ஊடகப் பரப்பில் பல பரிமானங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தவர் நேற்றைய தினம் கொழும்பில் தொடருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பொதுமக்கள், கல்வியலாளர்கள், அரசியல்வாதிகள் என பலருடனும் நட்புடனும் அன்புடனும் பழகி வந்த ஊடகவியலாளனை இன்று ஊடக சமுதாயம் இழந்து நிற்கிறது.
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து நிற்கிறது. ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.