சுதந்திரம்! தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரம் – சி.அ.யோதிலிங்கம்

இலங்கையின் 75வது சுதந்திரத்தினத்திற்கான ஆரவாரங்கள் தொடங்கிவிட்டன. ரணில் அரசாங்கம் இலங்கையின் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பிரகடனம் விடுக்கும் நாளாக சுதந்திரதினத்தை அறிவித்திருந்தது. குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நாளாக அறிவித்தது. தற்போது அதற்கான சுருதி கொஞ்சம் குறையத்தொடங்கியுள்ளது எனினும் 13வது திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் முனைப்புக்காட்டுவதுபோல ஒரு தோற்றம் தெரிகின்றது.

மறுபக்கத்தில் தமிழ்த்தரப்பு சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர். தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மட்டக்களப்பு நோக்கி 04ம் திகதி பாதயாத்திரை நடாத்துவதற்கும் மாசி மாதம் 07ம் திகதி மட்டக்களப்பில் இப்பாதயாத்திரைகள் சந்தித்து அங்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடாத்துவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன.
இவற்றிற்கு புறம்பாக தென்னிலங்கையில் எதிர்க்கட்சிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் நடாத்தப்போவதாக அறிவித்துள்ளன. கத்தோலிக்க மதபீடமும் சுதந்திரதின வைபவங்களைப் புறக்கணிக்கப்போவதாக கூறியுள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சுதந்திரதினம் என்பது தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக சிங்கள ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிப்பத்திரம்தான். சுதந்திரத்திற்குப் பின்னர்தான் ஒடுக்குமுறை சட்டபூர்வவடிவம் பெற்றது. இந்த ஒடுக்குமுறை இரண்டு வழிகளில் இடம்பெற்றது. ஒன்று அரச அதிகாரக் கட்டமைப்பை சிங்கள மயமாக்கியமையாகும். இரண்டாவது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதை அழித்தமையாகும்.

சுதந்திரத்திற்கு முன்னர் 1931ம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் அரைவாசிப்பொறுப்பாட்சி வழங்கப்பட்டபோதே அரச கட்டமைப்பை சிங்களமயமாக்கலும்  சிங்களவரல்லாத இனங்களை அழிக்கும் செயற்பாடுகளும் முடுக்கிவிடப்பட்டன ஆனாலும் முழுமையான அனுமதிப்பத்திரம் இல்லாததினால் முழுவீச்சுடன் அது இடம்பெறவில்லை. டொனமூர் காலத்தில் இந்திய வம்சாவழி மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்களது வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டது. கண்டியப்பிரதேசங்களில் இந்திய வம்சாவழியினரின் ஆதிக்கமும் அதன்வழி இந்திய அரசின் ஆதிக்கமும் பெருகிவிடும் என்ற அச்சமே இதற்குக்காரணமாகும். இலங்கையின் முதலாவது பிரதமராக பதவிவகித்த னு.ளு. சேனநாயக்கா போன்ற பெரும் தலைவர்கள் கூட இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இனவாதத்தைக் கக்குவதற்கு தயக்கம் காட்டவில்லை.

1931ம் ஆண்டு டொனமூர் யாப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தலில் இரண்டு இந்திய வம்சாவழியினர் தெரிவுசெய்யப்பட்டனர். ஹட்டனிலிருந்தும் தலவாக்கலையிலிருந்துமே தெரிவுசெய்யப்பட்டனர். இதனால் 1936ம் ஆண்டு தேர்தலின்போது அவர்களது வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டது எனினும் இத்தேர்தலிலும் மேற்படி இரு தொகுதிகளில் இருந்தும் இருவர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்குப் புறம்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகளில் இந்திய வம்சாவழியினர் அரச உத்தியோகங்களில் அதிகளவில் பணியாற்றியிருந்தனர். போக்குவரத்துத்துறையிலும் கணிசமானளவு பணியாற்றினர். சேர்.ஜோன்கொத்தலாவல போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஒரே இரவில் பலர் பதவிநீக்கப்பட்டனர். இவர்களில் பலர் மலையாள இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இன்னோர் பக்கத்தில் நெற்காணிச் சட்டம், போக்குவரத்துச் சட்டம், மீன்பிடிச் சட்டம் என்பன கொண்டுவரப்பட்டு இத் தொழில்களில் இருந்து இந்திய வம்சாவழியினர் அகற்றப்பட்டனர். ஒரு வகையில் டொனமூர் காலம் முழுவதும் இந்திய வம்சாவழியினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் இருந்தது வெள்ளவத்தை நெசவாளர் போராட்டமும் இதில் முக்கியமானது. இப் போராட்டம் லங்கா சமசமாஜக் கட்சியின் தோற்றத்திற்கு காரணமாகியது என்பது வரலாறு.
அதேவேளை போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நீக்கம் இலங்கை-இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பின் உருவாக்கத்திற்கும் காரணமாகியது. 1939ம் ஆண்டு நேருவின் முயற்சியினால் இலங்கை இந்தியர் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுவே பின்னர் 1950களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1940ம் ஆண்டு அப்புத்தளை கதிரேசன் கோவிலில் வைத்து இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது. இதன் பெயரும் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிகளவில் ஒரு தொழிற்சங்கமாக அறியப்பட்டபோதும் மலையக மக்கள் மத்தியில் தோன்றிய முதலாவது இனரீதியான அமைப்பு என்பதை மறுக்கமுடியாது.
ஈழத் தமிழர்கள் 1947ம் ஆண்டின் சோல்பரி யாப்பையும், அதன் வழிவந்த 1948ம் ஆண்டின் சுதந்திரப் பிரகடனத்தையும் கடுமையாக எதிர்த்தனர். 1944ம் ஆண்டு சோல்பரிக் குழுவினர் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக இலங்கை வந்தபோது அவர்கள் முன்னிலையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் 50:50 கோரிக்கையை முன்வைத்தார். சோல்பரிக்குழுவினர் இக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதற்குப் பரிகாரமாக அரசியல் யாப்பின் 29வது பிரிவு உட்பட சிறுபான்மையோர் காப்பீடுகள் என ஒரு பட்டியலை சேர்த்தனர்.  அப்பட்டியலில் 29வது பிரிவு, செனற்சபை , நியமன உறுப்பினர்கள், பலஅங்கத்தவர் தேர்தல் தொகுதிகள், கோமறைக்கழகம், அரசாங்க சேவை, நீதிசேவை ஆணைக்குழுக்கள், அரசியல் யாப்பை திருத்துவதில் 2ஃ3 பெரும்பான்மை என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. நடைமுறையில் பெரும் தேசியவாதத்தின் தீயில் கருகி இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் அழிந்தன என்பது வரலாறு. பிரித்தானிய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் பிரச்சினையை ஒரு அடையாளப் பிரச்சினையாக பார்த்தார்களே தவிர இறைமைப் பிரச்சினையாகப் பார்க்கவில்லை.

சோல்பரியாப்பு முழுமையான பொறுப்பாட்சியை இலங்கையர்களுக்கு வழங்கியது. பெயரளவு அதிகாரங்களை மட்டும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் தங்கள் வசம் வைத்திருந்தனர். ஏற்கெனவே கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்திலிருந்து கட்டிவளர்க்கப்பட்ட ஒற்றையாட்சி நிர்வாகக் கட்டமைப்பிடம் பெரும்பான்மை ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. இது இலகுவாகவே ஆட்சி அதிகாரக் கட்டமைப்பிலிருந்து தமிழ் மக்கள் தூக்கி வீசப்படுவதற்கு காரணமாகியது.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் சோல்பரி யாப்பினை கடுமையாக எதிர்த்தார். இதனை தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டிருங்கள் நான் பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் நேரில் பேசி சோல்பரி யாப்பினை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறேன் என தனது சகாக்களிடம் கூறிவிட்டு இங்கிலாந்து சென்றார். அவர் அங்கு பேசிக்கொண்டிருக்கும் போதே அருணாசலம், மகாதேவா போன்ற தலைவர்களின் ஆதரவைப் பெற்று னு.ளு.சேனநாயக்கா சோல்பரி யாப்பினை நிறைவேற்றுவித்தார்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் நாடு திரும்பியதும் சோல்பரி யாப்புக்கு ஆதவாக வாக்களித்தவர்களை தேர்தலில் தோற்கடிக்கச் செய்வேன் என சபதம் கூறி 1947ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். குறிப்பாக அருணாசலம் மகாதேவாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தனது சொந்தத் தொகுதியான பருத்தித்துறை தொகுதியை விட்டு யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் அருணாசலம், மகாதேவா உட்பட சோல்பரி யாப்பை ஆதரித்தவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர்.

தொடர்ந்து சுதந்திர பிரகடனத்துக்கான முயற்சிகளை னு.ளு.சேனநாயக்கா அரசாங்கம் மேற்கொண்ட போது ஜீ.ஜீ.பொன்னம்பலம் அதனையும் கடுமையாக எதிர்த்தார். னு.ளு.சேனநாயக்கா, நடேசன், சிற்றம்பலம் ஆகியோரை அமைச்சர்களாக்கி அதனையும் முறியடித்தார். இதன் பின்னர் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் அரசாங்கத்தில் இணைந்து கைத்தொழில் மீன்பிடி அமைச்சராக பதவியேற்றார் என்பது வரலாறு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அரசாங்கத்தில் இணைந்தமை தமிழரசுக் கட்சி தோற்றம் பெறுவதற்கும், தந்தை செல்வா ஒரு தலைவராக எழுச்சியடைவதற்கும் காரணமாகியது. தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்திற்கு மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை உடனடிக் காரணமாகக் கூறப்பட்டபோதும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அரசாங்கத்துடன் இணைந்தமையும் முக்கிய காரணமாகியது.

சுதந்திரத்தின் பின்னர் சிங்களமயமாக்கல் பல வழிகளில் இடம்பெற்றது. முதலில் அரச குறியீடு சிங்களமயமாக்கப்பட்டது. சிங்கக்கொடி தேசியக்கொடியானமை இந்த வகையிலேயே இடம்பெற்றன. வாளேந்திய சிங்கம் இலங்கையின் இறைமையக் குறித்தபோது தமிழ், முஸ்லீம் மக்களைக் குறிக்கும் செம்மஞ்சள், பச்சைக் கோடுகள் சிங்கத்துக்கு வெளியிலேயே இடப்பட்டன. இக்கோடுகளை சிங்கத்திற்குள் இடுங்கள் என தமிழ்த் தலைவர்கள் வற்புறுத்தியபோதும் சிங்களத் தலைவர்கள் அதனை நிராகரித்தனர். இது இலங்கையின் இறைமைக்குள் தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இடமில்லை என்பதை வெளிப்படுத்தியதோடு வாளேந்திய சிங்கம் தமிழ், முஸ்லீம் மக்களை பயமுறுத்துவதுபோலவும் இருந்தது. தேசியக் கொடியில் இந்த புறக்கணிப்பை எதிர்த்து தேசியக் கொடிக் குழுவில் அங்கம் வகித்த செனட்டர் நடேசன் வெளியேறியிருந்தார்.

இரண்டாவது சிங்களமயமாக்கல் மலையக மக்களின் பிரஜாவுரிமைப்பறிப்பும், வாக்குரிமைப் பறிப்பும் ஆகும.; இது ஒரு வகையில் சிங்கள மயமாக்கலாகவும், கட்டமைப்புசார் இன அழிப்பாகவும் இருந்தது. 1947ம் ஆண்டு தேர்தலில் மலையக மக்களின் பிரதிநிதியாக 07பேர் தெரிவுசெய்யப்பட்ட நிலையும் 20வது தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றிபெற்ற நிலையுமே இப் பறிப்புகளுக்கு காரணங்களாகும். மலையக மக்கள் இலங்கை இந்திய காங்கிரஸ் போட்டியிடாத இடங்களில் இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தனர்.

பிரஜாவுரிமைச்சட்டம் (1948) இந்திய-பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டம் (1949) என்பன மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிக்க தேர்தல்கள் திருத்தச்சட்டம் (1949) மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1949ம் ஆண்டு வாக்குரிமையை இழந்த மலையக மக்கள் 30 வருடங்களின் பின்னர் 1977லேயே வாக்குரிமையைப் பெற்றனர்.

மூன்றாவது சிங்களமயமாக்கல் சிங்கள குடியேற்றங்களாகும். இதுவும் சிங்களமயமாக்கலும் இன அழிப்பும் ஆகும். மட்டக்களப்பு தெற்கில் ஆரம்பிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் பின்னர் திருகோணமலை மாவட்டத்தில் தாண்டவமாடின. உலகில் பின்பற்றப்படும் அனைத்து குடியேற்ற முறைகளும் திருகோணமலை மாவட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. திட்டமிட்ட விவசாயக் குடியேற்றம், சட்டவிரோத விவசாயக் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம், வியாபாரக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், புனிதபிரதேச குடியேற்றம், முப்படைப்பண்ணைகளுக்கான குடியேற்றம் என இவை வளர்ந்தன.

நான்காவது தனிச்சிங்களச் சட்ட அமுலாக்கம் ஆகும். இதுவும் சிங்களமயமாக்கலும், இன அழிப்பும் ஆகும். 1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களின் எதிர்ப்பினால் 1958ம் ஆண்டு தமிழ் மொழி உபையோகச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அது பெரியளவிற்கு நடைமுறைக்கு வந்தது எனக் கூற முடியாது. 1972ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பின் மூலம் தனிச் சிங்களச் சட்டத்திற்கு அரசியல் யாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

ஐந்தாவது பௌத்த மதம் முதன்மை மதமாக்கப்பட்டமையாகும். இதன் ஒரு வெளிப்பாடாக தேசியக் கொடியின் நான்கு மூலையிலும் அரச இலைகள் சேர்க்கப்பட்டன. பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் முதலாவது குடியரசு யாப்பில் கூறப்பட்டது.

மொத்தத்தில் 1948ன் சுதந்திரமே சிங்கள மயமாக்கலுக்கும், தொடர்ச்சியான இன அழிப்புக்கும் காரணமாகியது.
எனவே சுதந்திரம் என்பது தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு சிங்கள ஆட்சியாளர்களுக்கு கிடைத்த அனுமதிப்பத்திரம்தான்.

Recommended For You

About the Author: Editor Elukainews