
இம்முறை அன்பே சிவம் விருது அறப்பணித் தந்தையாக மனிதநேய செம்மலாக,
வன்னி மண் பேரவலத்தினை தொடர்ந்து ஆதரவற்ற குழந்தைகளை முதியோரை
பெருமளவில் பொறுப்பெடுத்த வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில் தர்மகர்த்தா அருளகம் சிறார்கள் இல்லம், சிவன் முதியோர் இல்லம், சிவன் கோசாலை ஆகியவற்றின் நிறுவுனருமான சிவத்திரு. ஆ.நவரட்ணராசா ஐயாவிற்கு அகில இலங்கை சைவ மகா சபையால் இன்று தைப்பூச திருநாளில் அன்பே சிவம் விருது சைவ ஆதீனங்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.

ஆலயம் சமூக மையம் என்பதை மிக உன்னதமாக வன்னி சிவப் பிராந்தியத்திலே நிறுவிக் காட்டியவர் அறப்பணித் தந்தை நவரட்ணராசா ஐயா என்றால் அது மிகை இல்லை. அறப்பணி அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அம்மா அவர்கள் அவ்வாறு தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தை கட்டி எழுப்பி மகளிர் இல்லத்தை உருவாக்கி சைவ உலகிற்கு முன்னுதாரணமாக குடிகளை தழுவிய கோவிலுக்கு இலக்கணம் வகுத்தாரோ அதே போன்று வன்னி மண்ணில் அதனை செயற்படுத்தி வருபவர் நவரட்ணராசா ஐயா 80 களில் சிவன் ஆலயத்தை அடித்தளமிட்டதோடு இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் ஆண், பெண் சிறுவர்களிற்கான புகலிடமாக அருள கத்தை ஆலயத்தின் முக்கிய சமூக சேவை மையமாக உருவாக்கினார்
வன்னி யுத்த முடிவில் பல நூறு சிறார்களை தத்தெடுத்தார். அதே நேரம் சிவன் முதியோர் இல்லத்தை நிறுவி ஏதிலிகளாக நின்ற மூத்தோரை பொறுப்பெடுத்தார். உடல் நலமும் மன நலமும் பாதித்த மூத்தோரை ஆறுதல் அளித்து இறுதி கடன் கூட தானே ஆற்றினார்.
200 ற்கு மேற்பட்ட சிறார்கள் இன்று அருளகத்தில் உள்ளனர். கடந்த காலத்தில் இவ் இல்ல சிறார்கள் பலர் மருத்துவ, வர்த்தக கலை நுண்கலைப் பீடங்களிற்கு தெரிவானது குறிப்பிடத்தக்கது.
200 பசுக்களை காத்து நிற்கும் சிவன் கோசாலையையும் உருவாக்கி பராமரித்து வருகின்றார்.
இதனை விட இங்கு குறிப்பிடாத மனித நேயப் பணிகள் ஏராளம்.
இத்தனையையும் தன்னகடத்துடன் சத்தமின்றி ஆற்றி வரும் உன்னதமான மனித நேயப் பணிகளின் வழிகாட்டியை ஆலயம் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த உத்தமருக்கு இன்றைய சிவராத்திரி நன்னாளில் அன்பே சிவம் விருதை வழங்குவதில் சைவ மகா சபை பேருவகை அடைகின்றது.
ஆண்டு தோறும் மகா சிவராத்திரி தினத்தில் அறிவிக்கப்பட்டு அடுத்து வரும் தைப்பூசத்தில் வழங்கப்படும் இவ்விருது கடந்த முறைகளில் மகப்பேற்று நிபுணர் சரவணபவற்கும் இந்துக்கல்லூரிகளின் அதிபர் பஞ்சலிங்கத்திற்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







