முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலை பாரியளவில் வெற்றிக்கொள்வோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்டங்கள் ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் இம்முறை உள்ள10ராட்சிமன்ற தேர்தலிலும் நாம் பாரிய வெற்றியை பெறுவோம்.
கடந்த 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தலை வெற்றிக்கொண்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கிராமங்கள், நகரங்களுக்கு பாரியளவிலான சேவைகளை வழங்கியுள்ளனர்.
எனவே இம்முறையும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை எம்மால் வெற்றிக்கொள்ள முடியும்.
எம்மத்தியில் பாரிய சவால்கள் காணப்படுகின்றன. எம்மிது சேறு பூசும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போலியான பிரசாரங்களை முன்னெடுத்து நாட்டில் பிரச்சினை காணப்படுவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை சூறையாடுவதற்கு சில கட்சிகள் முனைப்புடன் செயற்படுகின்றன.
ஜனநாயக ரீதியில் தேர்தலை வெற்றிக்கொள்ள வேண்டும் என்றே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விரும்புகின்றது. எனவே தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் அஞ்சவில்லை.
எனவே மார்ச் 09ஆம் திகதி தேர்தலை வையுங்கள். கட்சி என்ற முறையில் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கிப் பயணிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.