வடக்கு – கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும்: த.கலையரசன்

இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும் என்றும், 2023இல் வடக்கு – கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

ஆலையடிவேம்பில் இன்றைய தினம் (06.02.2023) இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய அரசியற் பயணத்திலே உள்ளுராட்சி மன்றங்கள் மிக முக்கியமானதாகவே இருக்கின்றது. ஒரு கட்டமைப்பிற்கு அத்திவாரம் எவ்வாறு பலமாக அமைக்க வேண்டுமோ அதே போன்றே ஒரு அரசியற் கட்சி தன்னைப் பலப்படுத்துவதற்கு இந்த உள்ளுராட்சி மன்றங்களை பலமாக அமைக்க வேண்டும்.

அந்த அடிப்படையிலேயே நாங்கள் எமது உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களை எமது மக்களின் விருப்பிற்கு ஏற்றால் போல் தெரிவு செய்திருக்கின்றோம். இந்த அம்பாறை மாவட்டத்திலே 07 உள்ளுராட்சி மன்றங்களிலே 42 வட்டாரங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். இந்த வட்டாரங்களிலே எமது கட்சி அதிகப்படியான பெரும்பான்மையைப் பெறுவற்காக எமது வேட்பாளர்களும் எமது மக்களும் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

கடந்த காலத்திலே சில குறைபாடுகள் காரணமாக ஆலையடிவேம்பு பரதேசசபையிலே எமது ஆட்சி அதிகாரங்களைச் செலுத்த முடியாத நிலை காணப்பட்டது. இருந்தும் இந்தப் பிரதேசம் தொடர்பில் நாங்கள் எமது அரசியல் ரீதியான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற எமது மக்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக எமது துணிகரமான செயற்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதை நாங்கள் துணிவாகச் சொல்ல முடியும். அந்த அடிப்படையில் எதிர்வரும் 2023ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பத்து வட்டாரங்களிலும் எமது கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது எமது மக்களின் தலையாய கடமையாகும்.

தமிழர்கள் அதியுச்ச அதகாரங்களை பயன்படுத்தக் கூடிய களங்களாக இந்த உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்றன. அந்த உள்ளுராட்சி மன்றங்களைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு எமது மக்கள் கைகளிலேயே இருக்கின்றது. எமது மக்கள் தொடர்பில் அன்றாடம் இடம்பெறுகின்ற சில பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தரக் கூடிய ஒரு இடமாக இந்த உள்ளுராட்சி மன்றங்களே இருக்கின்றன.

அந்த அடிப்படையிலே அவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து எமது மக்களுக்குச் சேவையாற்றக் கூடியவர்களை எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும். எமது மக்களுடன் என்றுமே பயணிக்கின்றவர்களாக நாங்க் இருக்கின்றோம். மக்களுக்கான எமது தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் கைகளிலே இருக்கின்றது. கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் எமது மக்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அவற்றினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை ஒரு பாடமாக வைத்துக் கொண்டு இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும். இந்த 2023ஆம் ஆண்டு அமையப் போகின்ற இந்த உள்ளுராட்சி மன்றங்களின் அரசுகள் தமிழரசாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews