தலங்கமவில் வர்த்தகர் கொலை: சந்தேக நபர் வழங்கிய வாக்குமூலம்

கொழும்பு பத்தரமுதல்ல – தலங்கம பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வர்த்தகரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே தொழிலதிபரை கொலை செய்ததாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரொஷான் வன்னிநாயக்கவின் சடலம் தலங்கம பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் அவரது 3 மாடி கட்டடத்தில் இருந்து அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான இந்த வர்த்தகரின் மரணம் தொடர்பில் 27 வயதுடைய நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காவல்துறையினர் கைதுசெய்தனர். விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரும், கொலை செய்யப்பட்ட வர்த்தகரும் சமூக வர்க்க கழகம் ஒன்றின் அங்கத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி வர்த்தகரின் வீட்டுக்கு சென்ற சந்தேகநபர், வர்த்தகரிடம் 100,000 பணம் கேட்டதாகவும், வர்த்தகர் அதனை வழங்க மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சந்தேக நபர் தொழிலதிபரின் தலையில் தடியால் தாக்கிவிட்டு பின்னர் தொழிலதிபரை நீச்சல் தடாகத்துக்குள் இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பாதிக்கப்பட்டவரின் கைத்தொலைபேசி மற்றும் கடன் அட்டைகளை எடுத்துக்கொண்டு, அவரின் காரிலேயே சந்தேக நபரும் அவரது மனைவியும் கட்டுநாயக்க நோக்கி பயணித்துள்ளனர்.

தொழிலதிபரின் கடன் அட்டை மூலம் இந்தோனேஷியா செல்வதற்கு இரண்டு விமான அனுமதிச்சீட்டுக்களை பெற்றதாகவும், விசா பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் அவர்களால் வெளிநாடு செல்ல முடியவில்லை என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தநிலையில் சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை 48 மணிநேரம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews