
ஹட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தொழிற்சாலைக்கு விறகு ஏற்றிக்கொண்டிருந்த போது திடீரென உழவு இயந்திரம் தானாக இயங்கி முன்நகர்ந்துள்ளது.
இதன் போது சாரதி உழவு இயந்திரத்தினை நிறுத்துவதற்கு இயந்திரத்தில் ஏறிய போது தடுக்கி விழுந்தாகவும் அதனை தொடர்ந்து உழவு இயந்திரத்தில் அடிப்பட்டு சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து குறித்த சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.