
துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து, சிரியாவிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் கலகங்களில் ஈடுபட்டதுடன், 20 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிரியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில், துருக்கி எல்லையிலுள்ள ரஜோ நகருக்கு அருகிலுள்ள சிறையிலிருந்தே இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் பெரும்பாலானோர் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சிறைச்சாலை வட்டாரமொன்று ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளது. இச்சிறையில் சுமார் 2,000 கைதிகள் உள்ளனர். இவர்களில் 1,300 பேர் ஐ.எஸ் சந்தேக நபர்கள் என அவ்வட்டாரம் தெரிவித்துள்ளது. ‘நிலநடுக்கத்தையடுத்து ரஜோ நகரம் பாதிக்கப்பட்டது. ரஜோ சிறையிலுள்ள கைதிகள் கலகத்தில் ஈடுபட்டதுடன், சிறைச்சாலையின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்களில் 20 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்கள் ஐ.எஸ். அங்கத்தவர்கள் என நம்பப்படுகிறது’ என அவ்வட்டாரம் மேலும் தெரிவித்துள்ளது. துருக்கியில் நேற்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் துருக்கியில் 2,921 பேரும் சிரியாவில் 1,444 பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.